

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், குயின்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதுளசி மந்திர் கோயிலின் வெளியே நிறுவப்பட்டிருந்த காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக அச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மீண்டும் சீரமைக்க முடியாத அளவுக்குத் திட்டமிட்டு, சுத்தியலைக் கொண்டு நொறுக்கப்பட்டுள்ளது. இக்குற்றச் செயலில் ஆறு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சிசிடிவி காட்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது; சிலையைச் சேதப்படுத்தியவர்களைப் பற்றி தகவல்கள் தெரிந்தால், அவற்றைத் தெரிவிக்கும்படி நியூயார்க் நகரக் காவல் துறை அறிவித்துள்ளது.
கோயிலை நிறுவிய லக்ராம் மஹராஜ், இச்சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டிருப்பதோடு, பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கும் தயங்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த பிப்ரவரியில், மன்ஹாட்டனில் உள்ள ஒன்றியச் சதுக்கத்தின் அருகே நிறுவப்பட்டிருந்த காந்தியடிகளின் சிலை, அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் வாஷிங்டன் நகரிலுள்ள இந்தியத் தூதரகம் எதிரிலிருந்த காந்தியடிகளின் சிலை காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை தொடர்ந்து சேதப்படுத்தப்படுவதையடுத்து, இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று அங்குள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்தியத் தூதரகமும், இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கோயிலின் அருகிலுள்ள காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது, அப்பகுதியில் நிலவும் சமய வெறுப்பாகவும் அடையாளம் காணப்படுகிறது. நியூயார்க் மாகாண சட்டமன்றத்தில், குயின்ஸ் பகுதிக்கான உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெனிபர் ராஜ்குமார், அந்தச் சட்டமன்றத்தின் முதலாவது தெற்காசியப் பெண் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது நம்பிக்கைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் சவால் இது என்று அவர் இச்சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
காந்தியடிகள், இந்தியா மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் வாழும் மக்களுக்காகவும் அவர்களது அரசியல் உரிமைகளுக்காகவும் போராடியவர். அவரது சமய நல்லிணக்கக் கருத்துகளும் அறவழியிலான போராட்டங்களும் இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதற்குமே பொதுவானவை.
அமெரிக்காவில் காந்தியடிகளைத் தங்களது அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர். முன்னாள் அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா, தன்னுடைய எழுத்துகளிலும் உரைகளிலும் காந்தியடிகளைப் பற்றிப் பெருமையுடன் குறிப்பிட்டுவருகிறார்.
ஒபாமாவின் உள்ளம் கவர்ந்த நான்கு பெருந்தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியவர்களோடு காந்தியடிகளும் ஒருவர்.
சமய நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில், தனது உயிரையே பலியாகக் கொடுத்தவர் காந்தியடிகள். அமெரிக்காவில் அவர் சிலை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் இன்னும் அவரது கருத்துகள் உலகளவில் எடுத்துச்செல்லப்பட வேண்டிய தேவையை அழுத்தமாக எடுத்துக்காட்டியுள்ளது.