

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களின் மீது மே 22, 2018 அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பள்ளி மாணவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் நீண்ட காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 1,200-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்துத் தன்னுடைய இறுதி அறிக்கையைத் தமிழக அரசிடம் கடந்த மே 18 அன்று அளித்தது.
தூத்துக்குடியில் நடத்தப்பட்டது மிகவும் கொடூரமான நடவடிக்கை, முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது, கலைந்து ஓடியவர்களும் சுடப்பட்டுள்ளார்கள், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை, 6 பேர் பின்னந்தலையில் சுடப்பட்டுள்ளார்கள், காவல் துறையினர் யாரும் காயமடையவில்லை என்று இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இச்சம்பவத்துக்குக் காரணமான காவல் துறையைச் சேர்ந்த 17 அதிகாரிகளின் மீது குற்றவியல் மற்றும் துறைசார்ந்த நடவடிக்கைகளும் பொறுப்பின்றி நடந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மீது துறைசார்ந்த நடவடிக்கையும் எடுக்குமாறு பரிந்துரைத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாமிர உருக்காலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதால், அந்த ஆலையை மூடுமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி 100 நாட்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவந்தனர்.
குறிப்பிட்ட தினத்தன்று, உத்வேகத்தோடு ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்த மக்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதும் அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் கைதுசெய்ததும், காவலின்போது துன்புறுத்தியதும் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்தது.
இறுதி அறிக்கை குறித்த சமீபத்திய செய்திகளையடுத்து, விசாரணை நடவடிக்கைகளை விரைந்து முடித்து, அச்சம்பவத்துக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
துப்பாக்கிச்சூட்டுக்குக் காவல் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் மட்டுமே பொறுப்பாக்கப்பட்டுள்ளனர், மாநில அரசின் கருத்தையும் ஒப்புதலையும் பெறாமல் இப்படியொரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.
விசாரணை அறிக்கையை, சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இறுதி அறிக்கை, தமிழக அரசிடம் அளிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையிலும், அது சட்டமன்றத்தில் ஏன் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வியை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுவார்கள் என்பது சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியும்கூட.