காற்று மாசு ஓர் உயிர் பிரச்சினை எனும் புரிதல் வேண்டும்

காற்று மாசு ஓர் உயிர் பிரச்சினை எனும் புரிதல் வேண்டும்
Updated on
1 min read

காற்றில் கலக்கும் துகள் மாசுகளால் ஏற்படும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் மட்டும் இந்தியாவில் ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார ஸ்தாபனம் (டபிள்யு.எச்.ஓ.) அறிக்கை தெரிவிப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் துல்லியமானது தானா என்ற கேள்வி எழுந்தாலும், இது ஒருவேளை குறைந்தபட்ச உயிரிழப்பைத்தான் குறிக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

2.5 மைக்ரோ மீட்டர் அளவு கொண்ட நுண்ணிய துகள்கள் அல்லது அதையும்விடக் குறைந்த அளவுள்ள துகள்கள் இந்தியாவில் அதிலும் குறிப்பாகப் பெரும்பாலான நகரங்களில் காற்றில் கலப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. 10 மைக்ரோ மீட்டர் மற்றும் அதற்கும் குறைவான அளவுள்ள துகள்கள் மூக்கின் வழியாகக் காற்றுடன் உள்ளே புகும்போது, நுரையீரலின் அடியில் போய் தங்கிவிடக் கூடிய வாய்ப்புள்ளவை.

இப்படி மாசுத் துகள்கள் உடலில் கலப்பதால் சுவாச உறுப்புகளில் நோய்த் தொற்றில் தொடங்கி இதயத் திசுக்களுக்குப் போதிய ரத்தம் செல்லாத நிலைமை, ஆக்சிஜன் உறிஞ்சப்பட்ட ரத்தம் குழாய்களில் செல்ல முடியாதபடிக்கான தடை, பக்கவாதம் வரையிலான பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், காற்றில் கலக்கும் மாசுக்களின் அளவு, இதனால் ஏற்படும் நோய்கள், அந்த நோய்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆகியவற்றுக்குள்ள தொடர்பை மிகவும் கவனமாக ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.

காற்றில் மாசு கலப்பதற்கான காரணங்கள் நம்மூர் சூழலில் நீளமானவை. விறகு அடுப்புப் பயன்பாடு, பண்ணைகளில் காய்ந்த சருகுகளைக் கொளுத்துதல், சாணியால் தட்டப்பட்ட வரட்டிகளை எரித்தல், பழைய கட்டிடங்களை இடிக்கும்போதும் கட்டிட இடிபாடுகளைக் கொட்டும்போதும் வெளியாகும் கனமான புழுதி, வாகனங்கள் பயன்பாட்டால் சாலைகளில் படியும் புழுதி, நிலக்கரி என்று வீட்டுச் சமையலறையில் தொடங்கி தொழிற்சாலைகள் இயக்கம் வரை நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

ஏற்கெனவே நம்மிடம் இப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏராளமான வழிமுறைகள் உண்டு; கட்டிட இடிபாடுகள் தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகங்களிடம் உள்ள வழிகாட்டிக் குறிப்புகள் ஓர் உதாரணம். எல்லாம் வெறும் காகிதக் குறிப்புகளாக இருப்பதே நம்முடைய சாபக்கேடு.

அடிப்படையில், இது எவ்வளவு தீவிரமான பிரச்சினை என்பதை முதலில் அரசு உணர வேண்டும். தொடர்ந்து அரசின் மூலம் பொதுச் சமூகத்துக்கு அந்த விழிப்புணர்வு பரவ வேண்டும். நீண்ட காலச் செயல்திட்டத்தின் அடிப்படையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை இது. மக்களின் உயிர்ப் பிரச்சினை என்ற புரிதலிலிருந்தே பணிகளைத் தொடங்க வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in