

முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்மையின் தொடர்ச்சியாக தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டிருந்த தேக்க நிலை நீங்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்று நடவடிக்கை வரவேற்புக்குரியது. முதல்வர் ஜெயலலிதா மூன்று வாரங்களாக மருத்துவமனையில் இருக்கும் நிலையில், மூத்த அமைச்சரும் ஏற்கெனவே இரு முறை தற்காலிக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் தலைமை வகிப்பார். ஜெயலலிதாவின் துறைகளையும் பன்னீர் செல்வம் நிர்வகிப்பார். ஜெயலலிதா, இலாகா பொறுப்புகளற்ற முதல்வராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வருக்கு நீண்ட காலச் சிகிச்சை தேவைப்படும் என்பதால், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை கலந்த ஆளுநர் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். முதல்வரின் உடல்நிலை குறித்துக் கவலை தெரிவித்த எதிர்க்கட்சிகள், அவர் மீண்டும் நலம் பெற்றுத் தேறி வர வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தன. அதே வேளையில், அரசு நிர்வாகத்தில், ‘பொறுப்பில் இல்லாத வெளியார்’ தலையீடு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பின. நியாயமான கேள்வி இது. இது போன்ற மாற்று ஏற்பாடு கொஞ்சம் முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆளுங்கட்சியின் தயக்கமே விவாதங்கள் உருவெடுக்க வழிவகுத்தது.
இந்த மாற்றத்தின்போது ஆளுநர் தன் அறிக்கையில், ‘முதல்வரின் ஆலோசனையின்பேரில், இந்த நிர்வாக மாறுதல் மேற்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டது சர்ச்சையை உண்டாக்கியது. முதல்வர் வாய்மொழியாகக் கூறினாரா, கோப்பில் கையெழுத்திட்டாரா, இவற்றையெல்லாம் செய்யும் உடல் - மனநிலையில் இருக்கிறாரா என்றெல்லாம் தொடர்ந்து கேள்விகள் எழுந்தன.
1984-ல் முதல்வர் எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது, அமைச்சரவையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த இரா.நெடுஞ்செழியன் அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பது உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்குமாறு அப்போதைய ஆளுநர் எஸ்.எல்.குரானாவால் பணிக்கப்பட்ட முன்னுதாரணம் தமிழகத்தில் இருக்கிறது. சட்ட நிபுணர்கள் பலரும் இதைச் சுட்டிக்காட்டுகின்றனர். சட்ட வல்லுநர் துர்கா தாஸ் பாசு இதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வரின் பொறுப்புகளை வகிக்குமாறு, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இன்னொரு அமைச்சருக்கு அரசியல் சட்டத்தின் 166(3) பிரிவின் கீழ் ஆளுநர் உத்தரவிட முடியும். அப்படிப் பொறுப்பேற்குமாறு பணிக்கப்பட்ட மூத்த அமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கவும் அமைச்சரவையின் முடிவுகளை ஆளுநருக்குத் தெரிவிக்கவும் அரசியல் சட்டத்தின் 167(அ) பிரிவு வகை செய்கிறது. சட்டப் பேரவையைக் கலைக்குமாறு ஆளுநருக்குப் பரிந்துரைக்கவும் அரசியல் சட்டத்தின் 174(2)(ஆ) பிரிவின் கீழ் அவருக்கு அதிகாரம் உண்டு. இம்மாதிரியான தருணங்களில், அரசியல் சட்டம் சில அம்சங்களில் மெளனமாக இருக்கிறது. அதன் காரணமாக அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்தந்தச் சூழல்களுக்கு ஏற்பச் செயல்பட வழிவிடுகிறது.
முந்தைய முன்னுதாரணத்தை அதிமுகவினர் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சுணக்கம் இல்லாமல் நிர்வாகம் செல்ல அவர்கள் கூடுதல் பணியாற்ற வேண்டும்.