வலுவான எதிர்க்கட்சியே ஜனநாயகத்தைப் பலப்படுத்தும்!

வலுவான எதிர்க்கட்சியே ஜனநாயகத்தைப் பலப்படுத்தும்!
Updated on
1 min read

எந்தவொரு மக்களாட்சி நாட்டிலும் ஆளுங்கட்சியைப் போலவே எதிர்க்கட்சியும் வலுவாக இருந்தால் மட்டுமே அது மக்களாட்சிக்கான உண்மையான அர்த்தத்தை வழங்கும். நாடாளுமன்ற அவைகளில் பெற்றிருக்கும் இடங்களைத் தாண்டி, ஒரு எதிர்க்கட்சி அமைப்புரீதியிலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான இந்திய தேசியக் காங்கிரஸின் சரிசெய்யப்பட முடியாத பலவீனங்கள், ஒரு கட்சியின் பலவீனம் என்பதைத் தாண்டி ஜனநாயகத்தின் வலிமையையும் குறையச் செய்துகொண்டிருக்கிறது.

சுதந்திரம் பெற்ற காலத்தில், தனிப் பெரும்பான்மை கொண்ட தேசியக் கட்சியாக விளங்கிய காங்கிரஸ், இன்று மாநிலக் கட்சிகளின் தயவில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறது. அக்கட்சிகள் தங்களுக்குள் ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இன்னும் தயாராகவில்லை என்பதாலேயே, அக்கூட்டணியின் தலைமையில் காங்கிரஸ் தன்னை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் நாட்டின் பெரும் பொறுப்புகளை வகிக்கத் தகுதியானவர்கள், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், பொருளாதார அறிஞர்கள். ஆனால், தாங்கள் வழக்கமாகப் போட்டியிடும் தொகுதிக்கு வெளியே அவர்கள் ஆற்றிவரும் கட்சிப் பணிகள் என்னவென்று அவர்கள் இனிமேலாவது சுயமதிப்பீடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி மாநிலச் சட்டமன்றங்களுக்கும்கூடத் தனிக் கட்சியாகப் போட்டியிட்டு வெல்ல முடியாது என்ற சூழலிலும் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளிடையே தொடர்ந்துவரும் கோஷ்டிப் பூசல்கள், இன்னும் அவர்கள் தங்களது கனவுலகிலிருந்து கீழே இறங்கிவரத் தயாராகவில்லை என்பதையே காட்டுகிறது.

2014 மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக, அடுத்துவந்த 2019 தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் தொடர்கிறது. ஆளுங்கட்சியின் மீதான மக்களின் இயல்பான அதிருப்தியே தனக்கான வெற்றிவாய்ப்பைத் தந்துவிடும் என்று காங்கிரஸ் காத்திருக்கும் என்றால், அடுத்த தேர்தலில் அந்த உத்தி வெற்றிபெறுமா என்பது சந்தேகம்தான்.

மத்தியில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு அமையலாம், அமைச்சரவையிலும் இடம்பெறலாம் என்ற விருப்பங்களோடு தனது தலைமையின் கீழ் அணிதிரண்டு நிற்கும் மாநிலக் கட்சிகளையும் காங்கிரஸால் தொடர்ந்து கூட்டணியில் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போகலாம்.

அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளை நேரு குடும்பத்தின் தலைமையால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் எனில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் அடுத்த தலைமையை ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும். பாரம்பரியமிக்க ஓர் அரசியல் குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்தி, அந்தப் பொறுப்பை இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நாடாளுமன்ற அவைகளில் கண்டனப் பதாகைகளை ஏந்துவதாலும், அவ்வப்போது திடுதிடுப்பென்று மக்கள் மேடைகளில் எழுச்சி உரைகளை ஆற்றுவதாலும் மட்டுமே காங்கிரஸுக்கு உயிரூட்டிவிட முடியாது.

பாஜகவின் சமயச் சார்பு நிலை கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அக்கட்சி வெகுவேகமாக ஊர்தோறும் வேரோடிக்கொண்டிருக்கிறது; அடுத்த மக்களவைத் தேர்தலைச் சந்திக்கவும் தயாராகிவிட்டது. காங்கிரஸ் இன்னும் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தயாராகவில்லையென்றால், மக்களின் நம்பிக்கையை எப்படி மீட்டெடுக்க முடியும்?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in