

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாகக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் பொதுவெளியில் பேசப்பட்டுவரும் செய்திகள் தமிழக மக்களைப் பெரும் கவலைக்கும் குழப்பத்துக்கும் உள்ளாக்கி இருக்கின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்.22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று முதல்கட்டத் தகவல் வெளியானது. மறுநாள் அடுத்த சில மணி நேரங்களில் அவர் வீடு திரும்புவார் எனும் தகவல் வெளியானது. அப்படி நடக்கவில்லை. தொடர்ந்துவந்த நாட்களில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் முதல்வர் குணமடைந்துவருவதாகக் கூறின. அதேசமயம், மேலும் சில நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டியிருப்பதையும் தெரிவித்தன. இப்போது 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், சர்வதேச அளவில் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை தொடர்வதையும் மேலதிக நாட்கள் மருத்துவமனையில் முதல்வர் தங்கியிருக்க வேண்டியதையும் தெரிவிக்கிறது மருத்துவமனையின் அறிக்கை.
ஒரு மனிதர் நோயால் பாதிக்கப்படுகையில், அவர் எவ்வகை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார் எனும் விஷயம் மருத்துவர் - நோய் பாதிப்புக்குள்ளானவர் இருவர் தொடர்பிலானது. அதிகபட்சம் ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டது. பொதுவெளிக்கு அது தெரிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, இத்தனை நாட்களுக்குள் உடல்நலம் பெற்று வீடு திரும்பிட வேண்டும் என்ற வரையறைகளும் ஏதும் இல்லை. ஆனால், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இந்த அடிப்படை உரிமையைச் சமூகம் அனுமதிப்பதில்லை. அதிலும், அரசியல் தலைவர்களைத் தம் குடும்பத்தில் ஒருவராக, அதற்கும் மேல் கடவுளுக்கு இணையாகவும்கூட வைத்துக் கொண்டாடும் இந்தியச் சமூகம் இதையெல்லாம் ஒருவரின் அந்தரங்க விஷயமாக ஒருபோதும் கருதுவதில்லை. நம்முடைய தலைவர்களும் தம்மைக் குடும்பத்தில் ஒருவராக நிறுவிக்கொள்ளும் அரசியல் கலாச்சாரத்தையே வளர்த்தெடுக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது கட்சியினரைத் தாண்டியும் ‘அம்மா’ என்றழைக்கப்படுபவர். அவரும் “உங்களால் நான்; உங்களுக்காக நான்” என்றே அவர்களுடன் உறவாடியவர். இந்தச் சூழலில், திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழலில், மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அவரது உடல்நலன் தொடர்பான அக்கறைகளையும் கவலைகளையும் புறந்தள்ள முடியாது. மருத்துவமனை அளவில் வெளியான அறிக்கைகளைக் குறைசொல்ல ஏதும் இல்லை. ஆனால், இடையில் அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் வெளிவரும் அறிக்கைகளும் காணக் கிடைக்கும் காட்சிகளுமே மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கின. காவிரி விவகாரம், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் மருத்துவமனையில் அதிகாரிகளுடனும் கட்சியினருடனும் தொடர்ந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்துவருவதாக அரசு/கட்சித் தரப்புகள் தெரிவித்தன. ஆனால், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படுபவர்கள்கூட எவரும் அவரைச் சந்தித்ததாக இதுவரை நம்பத்தகுந்த தகவல்கள் இல்லை. ஆளுநரின் அறிக்கையிலும்கூட முதல்வரைச் சந்தித்ததாகவோ, பேசியதாகவோ குறிப்புகள் ஏதும் இல்லை. இதனிடையே ஒவ்வொரு நாளும் வெளியாகும், வதந்திகள் மக்களை மேலும் மேலும் பதற்றத்தில் தள்ளுகின்றன.
இப்படியான சூழலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும், “இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வரின் புகைப்படமோ, காணொலியோ வெளியிடலாம்” எனும் தொனியில் முன்வைத்திருக்கும் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது என்றே தோன்றுகிறது.
சர்வதேச அளவில் தலைவர்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் சூழலில், தேவையற்ற வதந்திகளைத் தவிர்க்க கையாளக்கூடிய ஒரு வழிமுறைதான் இது. முதல்வர் என்பவர் ஒருவகையில் இந்த மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு அங்கம் இல்லையா!