

நாடே விடுதலைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் பெற்ற சுதந்திரம் வெறும் அரசியல் சுதந்திரம் தானா, அது சமூக சமத்துவமாக மலரவில்லையா என்ற கேள்வியை எழுப்பி, நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை ராஜஸ்தானில் நடந்துள்ள தலித் சிறுவனின் மரணம் உருவாக்கியிருக்கிறது.
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில், சுரானா என்னும் கிராமத்தில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் என்ற பள்ளியில் 9 வயதான 3-ம் வகுப்பு மாணவன் இந்திர குமார், கடந்த ஜூன் 20-ம் தேதியன்று உயர் சாதியினருக்கான தண்ணீர்ப் பானையிலிருந்து குடிநீர் அருந்தியதற்காக ஆசிரியர் ஜெயில் சிங்கால் காதிலும் கண்ணிலும் தாக்கப்பட்டு, அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிக்சை பலனின்றி இறந்துவிட்டான்.
இதையடுத்து, அந்த ஆசிரியரின் மீது கொலைக் குற்றம், பட்டியலின மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, விசாரணை நடந்துவருவதாக ஜலோர் மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்திய அரசமைப்பின் கூறு 17, தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று பிரகடனப்படுத்தியதோடு, ‘எவ்வகையிலும் தீண்டாமையைக் கடைபிடிப்பது கடிந்து தடைசெய்யப்படுகிறது என்றும் தீண்டாமை காரணமாக எழும் தகவுக்கேடு எதனையும் செயலுறுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச் செயல்’ என்றும் அறிவிக்கிறது.
அரசமைப்பின் அடிப்படை உரிமையாக உறுதிசெய்யப்பட்டபோதிலும்கூட, தீண்டாமை ஒழிப்பு ஏட்டளவில்தான் இருக்கிறது; இந்தியாவில் இன்னும் சில இடங்களில் அது வெளிப்படையாகவே பின்பற்றப்பட்டுவருகிறது என்ற செய்தி, அதிர்ச்சியளிக்கிறது. விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பெருமைகொள்கிற நேரத்தில், தீண்டாமை என்னும் வரலாற்றுக் கறை நம்மைவிட்டு இன்னும் முழுதாக நீங்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
பள்ளிக்கூடங்களில் உயர் சாதி மாணவர்களுக்குத் தனிப் பானை, மற்ற மாணவர்களுக்குத் தனிப் பானை என்ற வழக்கம் இந்தியா முழுவதுமே ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வழக்கத்திலிருந்த இரட்டைப் பானை முறை, விடுதிகளில் மாணவர்களுக்குத் தனிப் பந்திகள் ஆகியவற்றுக்கு எதிராக சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தின.
மிகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சில பகுதிகளில் தேநீர்க் கடைகளில் நடைமுறையிலிருந்த இரட்டைக் குவளை முறையை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் இத்தகைய போராட்டங்கள்தான் தீண்டாமை ஒழிப்பில் முக்கியமான பங்கினை வகித்திருக்கின்றன. இன்றும்கூட இந்தியாவின் சில பகுதிகளில் இத்தகைய போராட்டங்களுக்கான தேவை எழுந்திருக்கிறது.
கட்சிகளின் தேர்தல் அரசியலைத் தாண்டி, சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தேவையையும் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது, சிறுவன் இந்திர குமாரின் மரணம். பாடத்திட்டங்களைக் குறித்துத் தீவிர அக்கறை கொள்ளும் நமது கல்விக் கொள்கைகள், கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் எந்த வடிவத்திலும் தீண்டாமை பின்பற்றப்படக் கூடாது என்பதையும் உறுதிசெய்தாக வேண்டும்.