

தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் ஒரே நாளில் 4 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, காவலர்களின் மனநலம் சார்ந்து அரசு இன்னும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
வெவ்வேறு காரணங்களுக்காக இந்தத் தற்கொலைகள் நடந்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும், நெருக்கடிகள் மிகுந்த பணிச்சூழலில் பணியாற்ற வேண்டியிருக்கும் காவலர்கள் தங்களது உடல்நலத்தோடு மனநலத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகிறது.
காவலர்களின் பணிச்சூழல் காரணமான மன இறுக்கங்களை நீக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இரண்டாம் நிலைக் காவலர்கள் தொடங்கி தலைமைக் காவலர்கள் வரையில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் பணிக்குப் பிறகு, ஆறாவது நாள் பணிக்கு மிகைப் பணி ஊதியமும், வாராந்திர விடுப்பும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
காவலர்களின் நீண்ட காலக் கோரிக்கையான இது கடந்த ஆண்டு நவம்பரில்தான் நிறைவேறியது. காவலர்கள் தங்களது உடல்நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், குடும்பத்தினருடன் போதிய நேரத்தைச் செலவழிக்கவும் இந்த விடுமுறை அனுமதிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உயரதிகாரிகளின் வீடுகளில் காவலர்களை ஆர்டர்லியாகப் பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஆர்டர்லியாகப் பணிபுரிந்துவந்த காவலர்கள் அனைவரையும் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காவல் துறையின் சிறப்பான சேவைகளைப் பாராட்டி தமிழக முதல்வரால் அளிக்கப்படும் பதக்கமானது காவல் துறை இயக்குநர் தொடங்கி காவலர் வரையில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு விடுதலைத் திருநாளிலேயே அது நடைமுறைக்கு வந்துள்ளது.
காவல் துறையின் பல்வேறு நிலைகளில் சிறப்பாகப் பணிபுரிந்துவரும் 15 பேர் விடுதலைத் திருநாளையொட்டி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்பு, புலன் விசாரணை, போக்குவரத்துப் பாதுகாப்பு என்று பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் காவலர்களின் பணிகளை அரசு அங்கீகரித்துப் பாராட்டிவருகிறது.
மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையிலான நல்லுறவை வளர்த்தெடுக்கும்வகையில், காவல் நிலையங்களில் வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு மனநலப் பயிற்சிகளை அளிப்பதற்காகவே தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காவலர் நிறைவாழ்வுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டுப் பட்டயங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு மாவட்டந்தோறும் காவலர்கள் மனநல ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு மனநலப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, காவல் துறை இயக்குநர் த.சைலேந்திரபாபு தனது இணையதளத்தில் மனநலம் குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார். காவலர்களின் மனநலம் சார்ந்து அரசு இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டுள்ள போதிலும்கூட, காவலர்களின் தற்கொலைகள் அவ்வப்போது தொடர்வது வருத்தமளிக்கிறது. இவ்விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.