

சுதந்திரத் திருநாளின் 75 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இமயம் முதல் குமரி வரையில் நிலத்தால், மொழியால், இனத்தால் வேறுபட்டு வாழும் அனைவரையும் இந்தியர் என்ற தேசிய உணர்வு பிணைத்துவைத்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பன்மைத்துவமே இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு. அந்தப் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம்.
இந்திய அரசமைப்பின் முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றோடு சகோதரத்துவமும் வழிகாட்டும் ஒளிவிளக்காய் மிளிர்கிறது. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டுணர்வையும் வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில், தனிமனிதர்களின் மாண்பையும் உள்ளடக்கியது, நமது அரசமைப்பு சுட்டுகின்ற சகோதரத்துவம். இன, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்து நம் ஒவ்வொருவரிடமும் அந்தச் சகோதர உணர்ச்சி மேம்பட வேண்டும்.
இந்திய மன்னர்கள் ஆங்கிலேயருடன் போரிட்டுத் தங்களது இன்னுயிரை, விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். தேசியப் பேரியக்கக் காலகட்டத்தில், தங்களது எழுத்தாலும் பேச்சாலும் மக்களிடம் நாட்டுப்பற்றை வளர்த்தெடுத்த தலைவர்கள் சிறைக் கொட்டடிகளில் வதைகளை அனுபவித்துள்ளார்கள்.
அறவழி நின்று போராடிய தலைவர்களும் அந்த அடக்குமுறைகளிலிருந்து தப்பவில்லை. ஆயுதம் தாங்கிப் போராடிய வீரர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். இந்திய சுதந்திரத்திற்காகப் பல்வேறு முனைகளில் நடந்த போராட்டங்களின் பலனாக அரசியல் விடுதலையைப் பெற்றோம்.
நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரை இழந்த, அடக்குமுறைகளின் துயரத்தை அனுபவித்த எண்ணிக்கையில் அடங்காத வீரர்களை நினைவுகூரும் இத்தருணத்தில், எதிர்கால இந்தியா குறித்த அவர்களின் கனவுகளை நனவாக்கும் கடமைக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.
கடந்த 75 ஆண்டுகளில் இந்தியத் திருநாடு எத்தனையோ சவால்களைச் சந்தித்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளது. எல்லைகளில் அந்நியர் ஊடுவருவல், எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள், உணவுப் பஞ்சங்கள், பொருளாதாரச் சரிவுகள் என வெவ்வேறுபட்ட சவால்களையும் நாம் வெற்றிகண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறோம்.
பாதுகாப்பை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறோம், தேசம் தழுவிய அளவில் பேரிடர் மேலாண்மை அமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம், உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுவிட்டோம். நவீன உலகமயச் சூழலில் சந்தைப் பொருளாதாரத்தை எதிர்கொள்ளும்வகையிலும் நம்மைத் தகவமைத்துக்கொண்டிருக்கிறோம்.
அண்மையில், கரோனா தொற்றினை அடுத்து 200 கோடி தடுப்பூசித் தவணைகளை எட்டி, மருத்துவ அறிவியலிலும் சாதனை படைத்திருக்கிறோம். விரைவில், பெருந்தொற்றின் காரணமான பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்தும் மீண்டெழுவோம்.
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான போர் தென்தமிழகத்தின் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தொடங்கியது. சிப்பாய்களின் கிளர்ச்சிக்கு வேலூரே முன்னுதாரணமானது. தேசியப் பேரியக்கமாகக் காங்கிரஸ் உருவாவதற்கு சென்னையில்தான் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது.
இன்றும் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் தமிழக வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துவருகின்றனர். சுதந்திர இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் அனைத்திலும் தமிழகம் தனக்கான பங்களிப்பை நிறைவாகத் தொடர்ந்துவருகிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தின் முத்திரைகளை இன்னும் அழுத்தமாகப் பதிப்போம். அதற்கு 75ஆவது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டங்கள் ஒரு வரலாற்று நினைவூட்டலாக அமையட்டும்.