

மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மாணவர்கள் எழுதும் தேர்வாக மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு(க்யூட்-யூஜி) உருவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு இத்தேர்வை எழுதுவது நடப்புக் கல்வியாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, மாநில அரசுகளின் 12 பல்கலைக்கழகங்கள், 11 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 தனியார் பல்கலைக்கழகங்களும் இத்தேர்வை ஏற்றுக்கொண்டு, இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தவுள்ளன.
தமிழ், ஆங்கிலம் உள்பட மொத்தம் 13 மொழிகளில் கணினிவழியில் நடத்தப்படும் இத்தேர்வுகளில் சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வினாத்தாள்கள் அமைந்துள்ளன.
நடப்புக் கல்வியாண்டில் இத்தேர்வு எழுதுவதற்காக சுமார் 14,90,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தோனேஷியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் 12 நகரங்களிலும் இத்தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன.
ஜூலை 15 தொடங்கி 20 வரையிலான முதல்கட்டத் தேர்வுகளின்போது, கடைசி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டதால் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. அவர்கள், இரண்டாம்கட்டத் தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
அது போல, ஒரு சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளின் காரணமாகவும் தேர்வு இரண்டாம்கட்டத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது. முதல்கட்டமாக நடத்தப்பட்ட தேர்வுகளில் 76.48% மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்கவில்லை என்று தேசியத் தேர்வு முகமையின் தேர்வுகள் தெரிவிக்கின்றன.
இரண்டாம்கட்டமாக ஆகஸ்ட் 4 அன்று தொடங்கிய தேர்வுகளில், முதல் நாளிலிருந்தே தேர்வுகளை ஒத்திவைக்கும் அறிவிப்புகள் தொடங்கிவிட்டன. அடுத்தடுத்த நாட்களிலும் அதே நிலை தொடர்ந்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை ஆகஸ்ட் 12 தொடங்கி 14 வரையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீண்டும் தள்ளிவைப்பதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவும் தேசியத் தேர்வு முகமையும் அறிவித்தன.
தொழில்நுட்பக் கோளாறுகளும் நிர்வாகப் பிரச்சினைகளும் அதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் ஆகஸ்ட் 24 தொடங்கி 28 வரையில் நடத்தப்படவுள்ளன. இதற்கிடையில் ஆகஸ்ட் 17, 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் மூன்றாம்கட்டத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இயற்கைப் பேரிடர்களின் காரணமாகத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டிய நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறுகளின் காரணமாகத் தேர்வுகளைத் தொடர்ந்து தள்ளிவைப்பது என்பது மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்குள் தள்ளிவிடக் கூடியது.
வலுவான தரவுப் பாதுகாப்புடன் தேர்வுகளை விரைந்து நடத்தி முடிப்பதற்கு இன்னமும் தீவிரமாகத் திட்டமிட வேண்டும். இளநிலைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஆகஸ்ட் வரைக்கும் நீட்டிப்பதால், கல்லூரிச் சேர்க்கையும் தாமதமாகிறது. இனிவரும் ஆண்டுகளில், இந்தத் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.