

மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பொதுப் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கத்தையும் அர்மேனியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளன.
பொதுப் பிரிவில், இந்தியாவின் ‘பி’ அணியும், மகளிர் பிரிவில் இந்தியாவின் ‘ஏ’ அணியும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளன. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியப் பெண்கள் அணி முதன்முறையாகப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் பிரிவில், இந்தியாவின் குகேஷ், நிஹல் சரின் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் அர்ஜுன் எரிகாசி வெள்ளிப் பதக்கத்தையும் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கங்ளையும் கைப்பற்றியுள்ளனர். மகளிர் பிரிவில், இந்தியாவின் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள இரண்டு அணிகளுக்கும் ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ரஷ்யாவில் நடக்கவிருந்த 44ஆவது உலக செஸ் போட்டி, ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாகத் தவிர்க்கப்பட்ட நிலையில், 4 மாத காலக் குறைந்த அவகாசத்துக்குள் இப்போட்டிகளைச் சீரும் சிறப்புமாக நடத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
இதுவரையிலுமான 95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், இந்தியாவில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இப்பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர்கள் இப்போட்டிகளில் வெண்கலப் பதக்கங்ளை வென்றுள்ளனர்.
சர்வதேச விளையாட்டுப் போட்டி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும், பன்னாட்டு வீரர்களின் முன்னிலையில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் நிகழ்த்தப்பட்டதும் செஸ் ஒலிம்பியாட்டைத் தமிழகத்தின் கொண்டாட்டமாகவே மாற்றிவிட்டன.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் வேலுநாச்சியார், மருதுபாண்டியர் உருவங்கள் இடம்பெறவியலாத நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை வீரர்களின் வரலாறு ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் மேடையேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத் துறையில், தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தீட்டிவருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, விளையாட்டு வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி செலவில் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழக வீரர்களைத் தயார்படுத்தும் திட்டத்தையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்டைத் தொடர்ந்து, சென்னை ஓபன் டபிள்யூ.டி.ஏ. சர்வதேச சாம்பியன் போட்டியையும் ஆசிய பீச் போட்டிகளையும் தமிழகத்தில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக விளையாட்டு வீரர்களிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்படுத்தியுள்ள தாக்கமும் ஊக்கமும் தமிழகம் விளையாட்டுத் துறையில் முன்னணி மாநிலமாக முத்திரை பதிப்பதற்கு வழிசமைக்கட்டும்.