தண்டோரா தேவையில்லை: வரவேற்கத்தக்க முடிவு!

தண்டோரா தேவையில்லை: வரவேற்கத்தக்க முடிவு!
Updated on
1 min read

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அண்மையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம், சமூக ஆர்வலர்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் சென்று சேர்ப்பதற்குத் தண்டோரா போடும் வழக்கம் இன்னும் சில இடங்களில் தொடர்வதைச் சுட்டிக்காட்டியுள்ள தலைமைச் செயலாளர், அவ்வழக்கத்துக்குத் தடைவிதிக்குமாறும் இதுகுறித்த விழிப்புணர்வை ஊராட்சிகள் வரையிலும் கொண்டு சேர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரக அளவில் தண்டோரா போடும் பணி என்பது காலம்காலமாகத் தொடரும் சமூகரீதியான ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து நிலைபெறச் செய்யும் தன்மையையும் உள்ளடக்கியிருப்பதால், தலைமைச் செயலாளரின் இந்தக் கடிதம் சமூகவியல் கண்ணோட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.

தண்டோரா என்றும் தமுக்கு என்றும் அழைக்கப்படும் தோளில் தொங்கவிட்டபடி முழக்கப்படும் தோல் வாத்தியமானது, வரி வசூலித்தல் உள்ளிட்ட அரசின் முக்கிய அறிவிப்புகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக மன்னராட்சிக் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது.

பழங்காலத்தில் அரசின் செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்க்க இதுவே முக்கியமான தகவல்தொடர்பு வழிமுறையாக இருந்துவந்தது. இதற்காகவே தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். காலப்போக்கில், அந்தப் பணியை ஏற்றிருந்தவர்கள், அரசின் செய்தியாளர்கள் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி, சமூகத்தின் அடித்தட்டு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

அரசின் செய்திகளைக் கொண்டுபோய் மக்களிடம் சேர்த்தவர்கள், ஊரகங்களில் உறவினர்களுக்கு இடையில் செய்திகளைப் பரிமாறும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

நாளேடுகள், வானொலி, தொலைக்காட்சி என்று அரசின் செய்திகளை இன்று மக்களிடம் உடனுக்குடன் கொண்டுசேர்ப்பதற்கான வாய்ப்புகள் பெருகிவிட்டாலும், தண்டோரா போடும் வழக்கம் ஒரு சில இடங்களில் தொடரவே செய்கிறது. குறிப்பாக, இயற்கைப் பேரிடர் காலங்களில், நீர்நிலைகளின் கரையிலிருப்போரைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்வதற்கு ஊரக வருவாய்த் துறை அலுவலர்கள் தண்டோரா போடும் வழக்கத்தைப் பின்பற்றிவருகிறார்கள்.

மிகச் சில இடங்களில், கிராமசபைக் கூட்டங்கள் பற்றிய விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவும் தண்டோரா வழக்கம் தொடர்கிறது. ஒருபக்கம், சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகும் வாய்ப்பை வழங்கி, அச்சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே கிராமசபைக் கூட்டங்களுக்காகத் தண்டோரா போடுவது என்பது ஒன்றுக்கொன்று முரணானது. தலைமைச் செயலாளரின் கடிதத்தை அடுத்து, நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கூடவிருக்கிற கிராமசபைக் கூட்டங்களுக்குத் தண்டோரா போடப்படாது என்பது அந்த விழாவுக்கு இன்னும் கூடுதல் பெருமையைச் சேர்க்கிறது.

மக்களிடம் செய்திகளைச் சொல்வதற்கு ஒலிபெருக்கி போன்ற மின்சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்வது இன்று எளிதாகியுள்ளது. எனினும், தண்டோரா வழக்கத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரே கடிதம் எழுத வேண்டிய நிலையில்தான் சமூக நிலை இருக்கிறது.

தண்டோரா மட்டுமில்லை, சாதிய ஏற்றத்தாழ்வுகளின் குறியீடுகளாகவும் எச்சங்களாகவும் நம் நடைமுறை வாழ்வில் படிந்துள்ள ஒவ்வொரு கறையையும் துடைத்து அழிக்க வேண்டியது இளைய தலைமுறையின் கூட்டுப் பொறுப்பு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in