ஆலோசனைக் கூட்டங்கள் சம்பிரதாயமாகிவிடக் கூடாது!
தன்னுடைய முதல் நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னதாக மத்திய தொழிற்சங்கத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. தங்களுடைய நியாயமான கவலைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்த தொழிற்சங்கத் தலைவர்கள் சில முக்கியமான விஷயங் களைச் சுட்டிக்காட்டியும் இருக்கின்றனர்.
வேலைவாய்ப்பைப் பெருக்க அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் அரசின் முதலீடு பெருமளவில் இருக்க வேண்டும்; அரசுத் துறை நிறுவனங்களைச் சீரமைத்து அவற்றின் செயல்பாட்டை மேம் படுத்துவதுடன் விரிவுபடுத்த வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்; நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணுடன் குறைந்தபட்ச ஊதியத்தை இணைக்க வேண்டும்; ராணுவத்துக்கான ஆயுதங்கள், கருவிகள் உற்பத்தித் துறை, தகவல் தொடர்பு, ரயில்வே, சில்லறை வர்த்தகம், சுகாதாரம், செய்தி ஊடகம் ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் -இவையெல்லாம் தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கும் முக்கியமான கோரிக்கைகள்.
அரசின் நல்ல திட்டங்களுக்குப் போதிய நிதி இல்லாத நிலையில், வெளிநாடுகளில் வங்கிகளில் முதலீடு செய்யப்படும் கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவர அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை; இதில் முனைப்பாக இருந்து கோடிக் கணக்கான ரூபாய்களைப் பறிமுதல் செய்து மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கட்சி வேறுபாடு இன்றி எல்லாத் தொழிற்சங்கத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கூடவே, பணக் காரர்கள் மீதான வரிவிதிப்பை அதிகரிக்கலாம்; சேவைத் துறையில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள், தனியார் நட்சத்திர மருத்துவமனைகள் ஆகியோரை விரிவான சேவை வரிவிதிப்பின்கீழ் கொண்டுவரலாம் என்றும் யோசனை கூறியிருக்கின்றனர்.
பொருளாதாரரீதியாக இன்றைக்கு இந்தியாவும் ஒரு சக்தியாக நிற்கப் பெரிதும் உதவியவை அரசுத் துறை நிறுவனங்களே. நேரு காலத்தில் முக்கியமான துறைகளில் அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாலேயே நாட்டின் உற்பத்தி, உற்பத்தித்திறன் ஆகியவை பெருகியதுடன் தொழில் துறை வலுவான ஓர் இடத்துக்கும் வந்தது. காலப்போக்கில், அரசியல் தலையீடுகளாலும் மோசமான நிர்வாகத்தாலும் பல நிறுவனங்கள் நலிவடைந்தன.
எனினும், பாரத் மிகுமின் நிறுவனம், பாரத் சஞ்சார் நிகாம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், பாரத் மின்னியல் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இன்றும் தங்களுடைய அர்ப்பணிப்பு, அனுபவம் ஆகியவற்றால் சிறந்து விளங்குகின்றன. இந்தப் பட்டியலை விரிவுசெய்ய வேண்டியது புதிய அரசின் சமூகக் கடமை.
தொழிற்சங்கத் தலைவர்கள் உண்மையாகவே நிறைய நல்ல ஆலோசனைகளைத் தந்திருக்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டம் வெறும் சம்பிரதாயக் கூட்டமாகிவிடக் கூடாது. அரசு இதன் நல்ல கூறு களைச் செயல்படுத்துவதைப் பற்றித் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
கூடவே, இந்தப் புதிய யுகத்துக்கேற்ப பாதுகாப்பான, சந்தோஷமான பணிச் சூழலில் தொழிலாளர்களின் உச்சபட்ச உழைப்பையும் திறமையையும் எப்படிப் பெறுவது என்பதற்கான செயல்திட்டத்தையும் வகுக்க வேண்டும்!
