

ஆண்டுதோறும் மின்கட்டணத்தை 6% உயர்த்துவதற்கு அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் விண்ணப்பித்திருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-22 நிதியாண்டில் மின்சார வாரியத்தின் மொத்தக் கடன் சுமை சுமார் ரூ.1.58 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதைக் காரணம்காட்டி, வருடாந்திரக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நடப்பாண்டில் கணிசமாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் 6% மின்கட்டணம் உயர்ந்துகொண்டே செல்லும் என்பது ஏழை எளியவர்களுக்கு மட்டுமின்றி, தொழில் நிறுவனங்களுக்கும்கூடக் கடுமையான பொருளாதாரச் சுமையாக மாறும்.
மாநில மின்சார வாரியங்களின் கடனில் 75%-க்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற கூற்றினையும் உள்ளடக்கிய ‘உதய்’ திட்டத்துக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்புத் தெரிவித்துவந்த திமுக தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், மின்சார வாரியங்களின் கடனைக் காரணம்காட்டி மின்கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ள அனுமதி கேட்பது முன்னுக்குப் பின் முரணானது.
உற்பத்திச் செலவுக்கு இணையாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால், மின்விநியோக நிறுவனங்களை நட்டமின்றி நடத்த முடியும் என்று பரிந்துரைக்கும் மின்சாரத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், மின்கட்டண விகிதத்தை வெறும் வரவு-செலவுக் கணக்காக மட்டுமே கருதும் வகையில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்துவதற்கான முயற்சிகளைத் திமுக அரசு முன்னெடுத்துவருகிறது.
ஒருபக்கம், மின்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஒழுங்குமுறை ஆணையம் எடுத்துக்கொண்டுவிட்டது என்று மாநில உரிமைக்கான குரல் ஒலிக்கிறது. மற்றொருபுறம், அதே ஆணையத்திடம் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கேட்கப்படுகிறது. ஜெயலலிதா எதிர்த்த திட்டத்துக்கு அவருக்குப் பிந்தைய அதிமுக ஆட்சியில் அனுமதியளிக்கப்பட்டுவிட்டது என்று குற்றஞ்சாட்டிக்கொண்டே அத்திட்டத்தை மும்முரமாக நடைமுறைப்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படும்.
மின்சாரம் என்பது குடிநீர், சாலைகள், கல்வி, சுகாதாரம்போல மக்களுக்கு அரசு அளிக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகளில் ஒன்று. அடிப்படை வசதிகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதால், அதில் லாப நட்டக் கணக்குகளைப் பார்க்க வேண்டியதில்லை.
உயர்ந்துவரும் மின்தேவையைச் சரிசெய்ய உற்பத்தியைப் பெருக்க வேண்டிய திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவதற்கு அரசு முயல வேண்டுமேயன்றி, மின்வாரியங்களைக் கடன் சுமையிலிருந்து விடுவிக்கிறோம் என்று சொல்லி, மின்சாரப் பயன்பாட்டை ஒரு சுமையாக மாற்றிவிடக் கூடாது.
ஆண்டுதோறும் மின்கட்டணத்தை மறுபரிசீலிக்கவும் மறுநிர்ணயம் செய்யவும் தேவையிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அத்தகைய மறுநிர்ணயம் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் வரையில் உயர்ந்துகொண்டே செல்லும் என்பது ஏற்கப்பட முடியாதது. மாநில மின்சார வாரியங்கள் என்பவை மின்விநியோக நிறுவனங்கள் மட்டுமே அல்ல, மக்களுக்குச் சேவை செய்யும் அரசின் அங்கம் என்ற தற்போதைய நிலை தொடர வேண்டும்.