

கூடுதல் வரி விதிக்கும் முடிவின் தொடர்ச்சியாக, பொதுச் சரக்கு - சேவை வரி விதிப்பின் (ஜிஎஸ்டி) தொடர் செயல்பாடுகளில் முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது. மத்திய அரசின் தேவையற்ற நடவடிக்கை இது.
புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வருவதால், வருவாய் இழப்பைச் சந்திக்கவிருக்கும் மாநிலங்களுக்கு எந்த வருவாய் மூலத்திலிருந்து பணத்தை எடுத்து ஈடுகட்டுவது என்ற பிரச்சினையே இந்தச் சிக்கலின் மூலவேர். சில பொருட்கள் மீது கூடுதல் வரி (செஸ்) விதித்து, அதில் கிடைக்கும் பணத்தை மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறைக்கு ஈடாகத் தர மத்திய அரசு விரும்புகிறது. இதைச் சில மாநிலங்களின் பிரதிநிதிகள் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர். இதற்கு அவர்கள் முன்வைத்திருக்கும் காரணங்கள், “1. நாடு முழுக்க ஒரே விதமான வரி விகிதம் இருக்க வேண்டும் என்பதற்காகவே பொதுச் சரக்கு, சேவை வரி கொண்டுவருகிறோம். அதற்குப் பிறகும் கூடுதல் வரி விதிப்பதை மத்திய அரசு கைவிடாமல் தொடர்வது மக்களுக்கு அளித்துள்ள உறுதிமொழியை மீறுவதாகும். 2. இதை வெளிநாட்டு முதலீட்டாளர்களும் விரும்ப மாட்டார்கள். 3. ‘செஸ்’ எனப்படும் கூடுதல் வரி மூலம் கிடைக்கும் பணம், முழுக்க மத்திய அரசால் மட்டுமே செலவழிக்கப்படும். இது மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயை மத்திய அரசு தனக்கென்று ஒதுக்கிக்கொள்வதாகிவிடும். 4. எல்லாவற்றுக்கும் மேலாக, வரி விகிதங்கள் ஒரே சீராக இல்லாமல் குலைந்துவிடும்” என்கிற இந்த வாதத்தில் நியாயம் இருக்கிறது.
இன்னொன்றையும் நினைவுபடுத்துவது அவசியம். 2005-ல் மாநிலங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டபோது, சில மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மத்திய அரசு தன்னுடைய வரி வருவாயிலிருந்துதான் அளித்து ஈடுகட்டியது. தனி வரியையோ தீர்வையையோ விதிக்கவில்லை.
மத்திய அரசுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் நிதியைத் திரட்ட வேறு வழிகள் இருக்கின்றன.
26% வரி விதிப்புக்கு உள்ளாகும் பட்டியலில் இப்போதுள்ளவை நிச்சயம் அவசியப் பண்டங்களாகவோ, ஏழைகளால் பயன்படுத்தப்படுபவையாகவோ இருக்க வாய்ப்பில்லை. அவற்றின் மீதான வரியை மேலும் சில சதவீதம் உயர்த்தலாம். மத்திய அரசு உயர்த்த உத்தேசித்திருப்பதாகவும் தெரிகிறது. இப்போது சிகரெட் மீது மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. புகையிலையிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களில் சிகரெட்டின் பங்களிப்பு வெறும் 11% தான். வாயில் போட்டு மெல்லும் புகையிலை, குட்கா, பீடி போன்றவை பெரும் வரி விதிப்பிலிருந்து தப்பிவிடுகின்றன. மத்திய அரசு இவற்றின் மீதெல்லாம் கவனத்தைத் திருப்பலாம். வரி செலுத்துவோர் தொடர்பான நிர்வாகக் கட்டுப்பாட்டை மத்திய அரசிடம் தர முடிவுசெய்த மாநிலங்களில் சில, அந்தக் கட்டுப்பாடு தங்களிடமே இருப்பது நல்லது என்ற எண்ணத்தையும் இப்போது வெளிப்படுத்தியிருக்கின்றன.
இந்த யோசனைகள் செவிசாய்க்கப்பட வேண்டும். மாநிலங்களோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பதே கூட்டாட்சித் தத்துவம் வலுப்பட உதவும். அது ஒருமித்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்!