இந்தியப் பொருளாதாரம்: நம்பிக்கையும் சவால்களும்!

இந்தியப் பொருளாதாரம்: நம்பிக்கையும் சவால்களும்!
Updated on
1 min read

விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் பொருளாதாரப் பெருமந்த நிலையோ, உயர் பணவீக்க அழுத்தமோ ஏற்படாது என்று உறுதிபடத் தெரிவித்திருப்பது, பொருளாதார நிலை குறித்த அச்சங்களிலிருந்து விடுவித்து புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கத்தை 7%-க்குள் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள நிதியமைச்சர், கச்சாப் பொருட்களின் விலையைக் குறைத்து, உணவுப் பொருட்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து இந்தியா சற்றே மீண்டு வரும் இந்தச் சூழலில், சர்வதேச நாணய மதிப்பில் இந்திய ரூபாயின் பணமதிப்பு சரிவைச் சந்தித்துவருவது கவலையளிக்கும் அம்சமாக உள்ளது.

நடப்பாண்டு ஜனவரியில் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு ரூ.74 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, ஜூலை மாத இறுதியில் டாலர் ஒன்றுக்கு ரூ.80 எனச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் சுமார் 8% சரிந்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமே சரிந்துவிடவில்லை.

7 மாதங்களில் ஜப்பானின் யென் 15.4%, தென்கொரியாவின் வான் 10.6%, தாய்லாந்தின் பாஹ்த் 9.6%, பிலிப்பைன்ஸ் பெசோ 8.5%, தென் ஆப்பிரிக்காவின் ராண்ட் 7% சரிவைச் சந்தித்துள்ளன. பணமதிப்புச் சரிவுக்கு முக்கியமான காரணம், அமெரிக்க டாலரின் தேவை மற்றும் அளிப்புக்கு இடையிலுள்ள பொருந்தாத நிலை தொடர்ந்து அதிகரித்துவருவதே ஆகும்.

ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகச் சமநிலையும் தொடர்ந்து சவால்களைச் சந்தித்துவருகிறது. இந்தியாவில் 2022 ஜனவரியில் 17.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, ஜூனில் 25.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

வர்த்தகச் சமநிலையைப் பராமரிக்க முடியாததற்கான காரணம், சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய விலை தொடர்ந்து அதிகரித்ததாகும். தவிர, இந்தியப் பங்கு வர்த்தகச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்த அயல்நாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டதும் இந்நிலைக்கு ஒரு காரணமானது.

கடந்த 9 மாதங்களாகவே தொடர்ந்து இந்நிலை நீடித்துவருகிறது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 1.2 லட்சம் கோடி அந்நிய முதலீடுகள் பங்குச் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி, தனது அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து அமெரிக்க டாலர்களை விற்று, இந்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுத்துள்ளது. எனினும், ரிசர்வ் வங்கியின் தற்காப்பு நடவடிக்கைகளால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டுவிட முடியாது.

பங்கு மற்றும் கடன் சந்தைகளில் அந்நிய முதலீடுகள் திரும்பப் பெறப்படுவதால் ஏற்பட்டிருக்கும் பணமதிப்புக் குறைவானது காலப்போக்கில் பணவீக்கத்துக்கு இட்டுச்செல்லும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, வெளியேறும் முதலீடுகளைத் தக்கவைத்துக்கொள்வது ஆகியவற்றுடன் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுமே இச்சிக்கலுக்கான தீர்வுகள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in