

இந்தியாவில் மேலும் 15 சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் அவற்றில், 9 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு நற்செய்தி.
தமிழ்நாட்டின் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை, பிச்சாவரம், கூந்தன்குளம், வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டபுரம், வெள்ளோடு, மன்னார் வளைகுடா, வேம்பனூர் ஆகியவை ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் சதுப்புநிலப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவரும் கோரிக்கைகளுக்கு இனிமேலாவது உரிய கவனம் கிடைக்கும் என்று நம்பலாம்.
1971-ல் ஈரானின் ராம்சர் நகரில், ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின்படி, உலகெங்கும் உள்ள ஈரநிலங்களில் ஒரு சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ராம்சர் பகுதிகள் என அடையாளப்படுத்தி, சர்வதேச முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தியாவில், இதற்கு முன்பு ராம்சர் பகுதிகள் என 49 பகுதிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவில் உள்ள 26 சதுப்புநிலப் பகுதிகளுக்கு உடனடியாக ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவ்வாறு திட்டமிடப்பட்டது. என்றாலும் இரண்டு கட்டங்களாக15 சதுப்புநிலப் பகுதிகளுக்கு மட்டுமே இதுவரையில் ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு வகைப்பட்ட ஈரநிலப் பகுதிகள் மொத்தம் 7,57,040 உள்ளன. நாட்டின் மொத்தப் பரப்பளவில் ஏறக்குறைய 4% ஈரநிலப் பகுதிகளாகும். எனினும், சர்வதேச உடன்படிக்கையின் வரையறைகளின்படி, ஈரநிலங்கள் என்ற வகைப்பாடானது ஆறுகள், குளங்கள், இயற்கையாகவோ செயற்கையாகவோ உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் என அனைத்தின் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கியது. ஆனால், இந்தியாவில் ஓடும் ஆறுகளையொட்டிய நிலப்பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, மற்ற நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகள் மட்டுமே ஈரநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சதுப்புநிலப் பகுதிகள், நீரில் கலந்துள்ள திடக்கூறுகளைப் படியவைத்தும் தாவரங்களிலுள்ள ஆக்ஸிஜனை நீருக்கு வழங்கியும் சூழலை மேம்படுத்தும் இயற்கை அமைப்புகளாகும். வெள்ளங்களின்போது, நீரை உள்வாங்கி அவற்றின் வேகத்தைக் குறைப்பதோடு புயற்காற்றுகளின்போது கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும் செய்யும் இயற்கை அரண்கள்.
அதிவேக நகர்மயமாதலாலும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளாலும் இவை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துவருகின்றன. இப்பகுதிகளில் உள்ள தாவரங்கள், அவற்றைச் சார்ந்து வாழும் பறவைகள், விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுகளிலிருந்து இப்பகுதிகளின் உயிரினப் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். ஈரநிலப் பகுதிகளின் நிலைத்தப் பாதுகாப்புக்குச் சமீபத்திய சர்வதேச அங்கீகாரங்கள் வழிவகுக்கட்டும்.