குரங்கம்மையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கிறோமா?

குரங்கம்மையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கிறோமா?

Published on

கரோனா தொற்றிலிருந்து இன்னமும் முழுமையாக மீண்டுவர முடியாத நிலையில், குரங்கம்மை பரவல் குறித்த அச்சம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. எனினும், மத்திய-மாநில அரசுகள் இது தொடர்பில் எடுத்துவரும் துரித நடவடிக்கைகள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்தும்வகையில் அமைந்துள்ளன.

இந்தியாவில் இதுவரை 8 பேருக்குக் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற தகவலை நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நோய்ப் பரவலைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தேசிய அளவில் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) குரங்கம்மை வைரஸை வெற்றிகரமாகத் தனித்து அடையாளப்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதில் ஆராய்ச்சி நிறுவனங்களும் தடுப்பூசி மற்றும் நோய்த் தொற்று கண்டறியும் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆர்வம் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் நோய்த் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குரங்கம்மையின் அறிகுறிகள் உள்ளவர்களைச் சோதிக்க புனே நகரிலுள்ள தேசிய நுண்கிருமியியல் நிறுவனம் முதன்மைப் பரிசோதனை நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐசிஎம்ஆர்- நுண்கிருமிகள் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் சோதனையகம் (விஆர்டிஎல்) ஆகியவற்றின் கீழ் 15 பரிசோதனை நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குரங்கம்மை கண்டறியப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக மத்தியக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டு, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

குரங்கம்மை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாகவும் எழுத்துபூர்வமாகவும் மத்திய சுகாதார அமைச்சர் அளித்த பதில்களில் மிகவும் முக்கியமானது, கரோனாவின் அனுபவங்களின் காரணமாக எந்தவொரு நோய்த் தொற்றின் பரவலையும் கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்கிறோம் என்பதாகும்.

மே மாதத்தில், உலகளவில் முதலாவது குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டபோதே, அப்பரவலை எதிர்கொள்ள இந்தியா தயாராகிவிட்டது என்ற சுகாதாரத் துறை அமைச்சரின் பதில் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. 78 நாடுகளில் உள்ள 18,000 பேருக்கு இத்தொற்று பரவியுள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 என்பதையும் அவர் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை கண்டறியப்படவில்லை. அவ்வாறு கண்டறியப்பட்டால் உடனடியாக அது குறித்து தெரிவிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தொற்றுப் பரவல் குறித்துக் கிளம்பும் வதந்திகளால் மக்கள் அச்சத்துக்கு ஆளாக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை அறிகுறிகள் பரிசோதிக்கப்படுகின்றன. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 15 குரங்கம்மை பரிசோதனை நிலையங்களில் தமிழ்நாட்டின் கிண்டி கிங் பரிசோதனையகமும் ஒன்றாகும். தொற்றுக்களைக் கண்டறிவதிலும் கட்டுப்படுத்துவதிலும் மத்திய, மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பும்கூட.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in