சொத்து வரி வசூலுக்கு அச்சுறுத்தல் எதற்கு?

சொத்து வரி வசூலுக்கு அச்சுறுத்தல் எதற்கு?
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சி, திருத்தியமைக்கப்பட்ட சொத்து வரிகளின்படி வரி வசூல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறது.

சொத்து வரி செலுத்தாத வீடுகளை மூடி முத்திரையிடும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டுவருவதாக அண்மையில் வெளிவந்திருக்கும் செய்திகள் மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சுமார் 12 லட்சம் சொத்துரிமையாளர்கள் உள்ளனர்.

இவர்களில், சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் திருத்தியமைக்கப்பட்ட வரி விவரங்கள் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருத்தியமைக்கப்பட்ட வரி விகிதங்கள் குறித்த ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சுமார் 4 லட்சம் ஆட்சேபனை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், அந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரித்தொகை மறுநிர்ணயம் செய்யப்படவில்லை. மாறாக, திருத்தியமைக்கப்பட்ட புதிய வரி விகிதங்கள் குறைக்கப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டில் சென்னை மாநகராட்சி உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

உள்ளாட்சி நிர்வாகங்களுக்குச் செலுத்தப்படும் சொத்து வரி என்பது, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் பொருந்தும். இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் சொத்து வரி வசூலிக்கும் நடவடிக்கைகள் சமரசமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

எனினும், வணிக நிறுவனங்களும் தொழிலகங்களும் தாங்கள் செலுத்தத் தவறிய சொத்து வரிக்காக உள்ளாட்சி நிர்வாகங்களால் மூடப்படுகின்றனவே அல்லாமல், குடியிருக்கும் வீடுகளுக்கு அத்தகைய நெருக்கடிகள் கொடுக்கப்படுவதில்லை.

தொழில் நிறுவனங்களுக்கும்கூட, மறு அறிவிக்கைகள் வாயிலாக அவர்கள் சொத்து வரியைச் செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுகிறது.

ஆனால், சென்னையிலோ வீடுகளையும் மூடி முத்திரையிடும் வகையில் சட்டத் திருத்தங்களை ஆலோசிப்பது என்பது ஆழ்ந்த மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சொத்து வரியே, உள்ளாட்சி அமைப்புகளின் முதன்மை வருவாய். அதிலிருந்து பெறப்படும் வருவாயே உள்ளாட்சியின் அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கிறது. அதே நேரத்தில், குடியிருக்கும் வீடுகளுக்கான சொத்து வரியை வசூலிக்கையில், கடுமை காட்டாமல் வசூலிப்பதற்குத் திட்டமிட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்பதால், தற்போது திருத்தியமைக்கப்பட்ட வரி விகிதங்களை ஏற்றுக்கொள்வதில் மக்களிடையே தயக்கம் நிலவுகிறது. உரிய கால இடைவெளியில், வரி விகிதங்களைத் திருத்தியமைக்காமல் இப்போது திடுதிடுப்பென்று வரி விதிப்பை உயர்த்தியிருப்பதுதான், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது.

பெருந்தொற்றுக்குப் பிறகான பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்தும் இன்னும் அவர்கள் முழுதாக விடுபடவில்லை என்பதையும் கருணையோடு அணுக வேண்டும். சொத்து வரி செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மக்களின் அதிருப்தியைக் களைவதற்கான வாய்ப்பு. அதை விடுத்து, அச்சுறுத்தி வரி வசூலிப்பது ‘வேலொடு நின்றான் இடுவென்றது போலும்’ என்று வள்ளுவர் காட்டிய உதாரணம்போல பழிச்சொல்லுக்கு வாய்ப்பாகிவிடக்கூடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in