சட்டத் துறையிலும் சமூக நீதி?

சட்டத் துறையிலும் சமூக நீதி?
Updated on
1 min read

சட்ட அலுவலர்களை நியமிப்பதிலும் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என சமூக நீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவர்
சுப.வீரபாண்டியன், மாநில சட்டத் துறைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம் பெருங்கவனத்தை ஈர்த்துள்ளது.

நீதித் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற குரல்கள் எழுந்துவரும் இந்நேரத்தில், இக்கடிதம் முக்கியத்துவம் கொண்டதாக அமைந்துள்ளது. நீதிபதிகளுக்கான நியமனங்களைக் குறித்து மட்டுமே நடைபெற்றுவரும் சமூக நீதி விவாதம், வழக்கறிஞர்களைக் குறித்தும் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

சமூக நீதியை நடைமுறைப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் எந்த அளவுக்குச் செயலாக்கம் பெறுகின்றன என்பதைக் கண்காணிப்பதற்காக சுப.வீரபாண்டியனைத் தலைவராகக் கொண்ட சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவைக் கடந்த ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு அரசு நியமித்தது.

தமிழ்நாடு அரசின் சட்ட அலுவலர்கள் நியமனங்களில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடும் பெண்களுக்கான இடஒதுக்கீடும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் இந்நியமனங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு தன்னிடம் அளிக்கப்பட்ட மனுவையும் சட்டத் துறைச் செயலருக்கு இணைத்து அனுப்பியுள்ளார் சுப.வீரபாண்டியன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் நியமிக்கப்பட்டுள்ள 201 சட்ட அலுவலர்களில், பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 6 பேர் மட்டுமே.

அவர்களும் கூடுதல் அரசு வழக்கறிஞர்களாகவும் அரசு வழக்கறிஞர்களாகவும்தான் (உரிமையியல்) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களில் ஒருவர்கூடப் பட்டியலினத்தவரோ பழங்குடியினரோ பெண்களோ இல்லை என்று அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அவ்வப்போது பல கட்டத் தேர்வுகளின் வழியாக அரசு உதவி வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுக்கையில், இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்பட்டுவருகிறது.

ஆனால், ஆட்சிகள் மாறும்போது, ஆளுங்கட்சியின் விருப்பத்துக்கேற்பத் தற்காலிகமாக நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களில் இடஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகவே இன்னும் தொடர்கிறது. கடந்த ஆண்டு நீதிமன்ற வளாகங்களில் நடந்த முக்கிய விவாதங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.

கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துகொண்டே உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்களாகவும் பணியைத் தொடர்கிறார்கள். ஆனால், மாவட்ட, ஒன்றிய அளவில் கட்சியின் பொறுப்பாளர்களாகப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் அதன் காரணமாகவே நீதிபதி பணிகளுக்குச் செல்ல முடியாமலும் தாம் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வரும்போதுகூட அரசு வழக்கறிஞர்களாக ஆக முடியாமலும் அதிருப்தியோடு இருக்கிறார்கள்.

ஒரு சில மூத்த வழக்கறிஞர்களும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அவர்களிடம் பயிற்சிபெறும் இளைய வழக்கறிஞர்களுமே அரசு வழக்கறிஞராவதில் முன்னிலை வகிக்கிறார்கள் என்ற ஆளுங்கட்சி ஆதரவு வழக்கறிஞர்களின் அதிருப்தி இனிமேலாவது முடிவுக்கு வரக்கூடும். சுப.வீரபாண்டியனின் கடிதம் அதற்கான தொடக்கப் புள்ளியாகவும் இருக்கலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in