

அண்மையில் உத்தர பிரதேசத்தில் பண்டல்கண்ட் விரைவுச் சாலைத் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையானது, இதுவரையிலான இலவசத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த அரசுக் கொள்கைகளை ஒரு சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வைத்துள்ளது.
296 கிமீ நீளம் கொண்ட இந்த நான்குவழிச் சாலை, உத்தர பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளை இணைத்து, அங்குள்ள மக்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கப்போகிறது. அதே நேரத்தில், அரசின் செலவினங்களில் பெரும்பகுதியை இலவசத் திட்டங்களுக்காகவும் மானியங்களுக்காகவும் செலவிட்டால், இத்தகைய திட்டங்களை எவ்வாறு மேற்கொள்ள இயலும் என்று அதன் தொடக்க விழாவில் பிரதமர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நாட்டுக்கும் அதன் வளர்ச்சிக்கும் பேராபத்தாக விளங்கும் இலவசத் திட்டங்களைக் குறித்து, மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து மானியங்களுமே அவசியமானவை அல்ல; வாக்குகளைக் கவரும் நோக்கத்தில் அளிக்கப்படும் தவறான மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் மானியங்கள் அளிக்கப்பட வேண்டியது அவசியம்; மானியங்களைக் குறைப்பது அல்ல, அவற்றை முறைப்படுத்தி தேவை உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கச் செய்வதே தமது நோக்கம் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடக்கத்திலிருந்தே உறுதியாக நிற்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு செலவிடும் மூலதனச் செலவினங்கள் மிக முக்கியமானதாகும். இலவசத் திட்டங்களுக்கான மானியங்கள் என்பவை இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களைத் திசைதிருப்பியே மேற்கொள்ளப்படுகின்றன. 2004 தொடங்கி 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், மத்திய அரசின் மொத்தச் செலவுகளில் மூலதனச் செலவுகள் 23%-லிருந்து 12%ஆகக் குறைந்தன.
மாறாக, மானியங்களுக்கான செலவுகள் 9%-லிருந்து 16%ஆக அதிகரித்தன. நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 8 ஆண்டுகளில் மீண்டும் மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது மத்திய அரசின் செலவினங்களில் சுமார் 19% மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுவருகிறது.
மானியங்களுக்கான செலவுகள் 8% ஆகக் குறைந்துள்ளன. கடந்த இரண்டாண்டுகளில் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக மிகப் பெரும் அளவில் உதவித்தொகைகளும் உணவு தானியங்களும் வழங்கப்பட்ட நிலையிலும் மானியங்களின் செலவு கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
மூலதனச் செலவுகள் என்பவை பொருளாதார வளர்ச்சியோடு மட்டுமல்ல, அவை உருவாக்கும் பெரும் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளின் காரணமாக மக்கள் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாட்டுடனும் தொடர்புடையது. போதுமான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கினால், இலவசத் திட்டங்களுக்கும் மானியங்களுக்குமான தேவையே எழாது.
தற்போதைய உடனடித் தேவை, பெருமளவிலான வேலைவாய்ப்புகள்தான். உத்தர பிரதேச உரையில், இலவசத் திட்டங்கள் குறித்துப் பிரதமர் விடுத்துள்ள செய்தி, மாநில அரசுகளுக்கும் பொருத்தமானது.
தேர்தல் அறிக்கைகளை இலவசத் திட்டங்களால் நிறைக்கும் பிராந்தியக் கட்சிகள், வளர்ச்சித் திட்டங்களுக்கான வாக்குறுதிகளை வழங்கவும் செயல்படுத்தவும் முன்வர வேண்டும்.