

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் குறித்து வெளிவரும் செய்திகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன.
வாழ்வின் எந்தவொரு துயரத்துக்கும் தற்கொலை ஒருபோதும் தீர்வாகவே முடியாது என்பதை அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டியது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு. அரசியல் கட்சிகள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், குழந்தைகள் என அனைவருக்கும் இந்தப் பொறுப்பில் பங்கிருக்கிறது.
பள்ளி மாணவர்களின் தற்கொலைகளைக் கட்சி அரசியல் நோக்கில் அணுகுவதைத் தவிர்க்க அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். தற்கொலை செய்துகொண்டதாலேயே தியாகிகளாக அரசியல் கட்சிகளால் சித்தரிக்கப்படுபவர்கள் காலத்தின் போக்கில் நினைவிலிருந்தே அகன்றுவிடுவார்கள்.
குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதில் அரசியல் நோக்கங்களுக்கு எப்போதும் இடமளித்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிற இழப்பீடுகளும் நிதியுதவிகளும் தங்களது இறப்புக்குப் பின்னால் குடும்பத்தினர் பொருளுதவி பெற வாய்ப்புகள் உண்டு என்ற எண்ணத்தை மாணவர் மனதில் விதைத்துவிடக் கூடாது என்ற கவனமும்கூட வேண்டியிருக்கிறது.
பெற்றோர்களைப் பொறுத்தவரையில், தங்களது குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கிற அதே முக்கியத்துவத்தை அவர்களின் மனநலத்துக்கும் அளிக்க வேண்டும். சற்றும் எதிர்பாராத துயரங்களையும் சவால்களையும்கூட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்பதையும் எந்த நிலையிலும் மன உறுதியைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தாய் இறந்த நிலையில், தந்தையால் கைவிடப்பட்டு, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து 10-ம் வகுப்பில் 99.4% மதிப்பெண்கள் பெற்றுள்ள பாட்னா சிறுமி ஸ்ரீஜா, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நிலையிலும் 12-ம் வகுப்பில் 98% மதிப்பெண்கள் பெற்றுள்ள லக்னோவைச் சேர்ந்த மாணவி பிரமிதா திவாரி போன்றவர்கள்தான் உண்மையான சாதனையாளர்கள் என்றும் போராளிகள் என்றும் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
அவர்கள், பள்ளி வளாகங்களிலும் வெளியிலும் எதிர்கொள்ள நேர்கிற எந்தவொரு சிக்கலைக் குறித்தும் இயல்பாகப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளைப் பெற்றோர்கள் திறந்த மனதோடு அனுமதிக்க வேண்டும்.
ஆசிரியர்கள்-பெற்றோர்களிடையே தேர்வுகள், மதிப்பெண்கள் தாண்டியும் பொறுப்புமிக்க ஓர் உரையாடலுக்கான தேவையிருப்பதையே தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
அனைத்துக்கும் மேலாக, நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை ஓர் ஒப்பற்ற பரிசு என்பதையும் வாழ்க்கை என்பது நேர்கோட்டுப் பயணம் அல்ல, எந்தவொரு துன்பமும் அதிலிருந்து மீள முடியாததும் அல்ல என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
மாணவர்களின் அன்புக்குரியவரான அப்துல் கலாம், ‘அறிவார்ந்த குடிமக்களை உருவாக்க வேண்டும் என்றால், பள்ளிக் குழந்தைகளை நல்ல குடிமக்களாக மாற்ற வேண்டும்; நமது நாட்டின் வளர்ச்சிக்கான உண்மையான அடித்தளம் பள்ளி மாணவர்கள்தான்’ என்று கூறியிருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.
அவரது ஏழாம் ஆண்டு நினைவுநாளில், தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அப்துல் கலாம் நினைவைப் போற்றுவது என்பது அவர் அறிவுறுத்தியவாறு நல்ல குடிமக்களை உருவாக்கப் பள்ளி மாணவர்களைத் தகுதிப்படுத்துவதுதான். தற்கொலைகள் தீர்வல்ல, தப்பிக்கும் கோழைத்தனம்; தளராத மன உறுதியுடன் சிக்கல்களை எதிர்கொள்வதே வாழ்வுக்குப் பெருமை சேர்க்கும்.