நிதானம்தான் பலன் தரும்!

நிதானம்தான் பலன் தரும்!
Updated on
1 min read

உரி தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய உயர் நிலைக் கூட்டத்தில் உண்மையான நிலவரம் உணரப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இப்போதைக்கு எந்தவித மாற்றமும் இல்லையென்று இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, பேசிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சற்றே ஆறுதல் தரும் விஷயம் இது. இந்த ஒப்பந்தத்தை அடியோடு ரத்துசெய்வதால் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்பதை உண்மை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

1960-ல் உலக வங்கியின் முன் முயற்சியால் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இது. உலக வங்கியின் முந்தைய அமைப்பான ‘மறுகட்டமைப்பு, வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி’ இந்த ஒப்பந்தத்துக்கு உதவிசெய்தது. இதற்கு முன்பு பாகிஸ்தானுடன் நடந்த போர்களின்போதும், மோதல்களின்போதும்கூட இந்த ஒப்பந்தம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டதில்லை. இந்நிலையில், உரி தாக்குதலைக் காரணம் காட்டி, இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்தால் இந்தப் பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கெளரவத்துக்கும் இழுக்காகிவிடும். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக உலக வங்கியை பாகிஸ்தான் அணுகியிருப்பது கவனிக்கத் தக்கது. சர்வதேச நீதிமன்றத்தையும் அந்நாடு அணுகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மையில், பாகிஸ்தானுக்குள் பாயும் சிந்து நீரின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அதன் கிளை நதிகள் மீது அணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்க வேண்டும். குறுகிய காலத்தில் செய்யக்கூடிய வேலை அல்ல இது. அந்த அணையால் இமயமலைப் பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதாலும் புவி அரசியல் நிலைமை மோசமடையும் என்பதாலும் எந்த சர்வதேச அமைப்பும் அணைகளைக் கட்ட கடனுதவி செய்யாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உரி தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையை எடுப்பதாக இருந்தாலும் நிதானித்து, நன்கு பரிசீலித்து எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு முன்னால் பகிரங்கமாக எதையும் பேசத் தேவையில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் மொத்த வர்த்தகப் பரிவர்த்தனை குறைவுதான் என்பதால், ‘மிகவும் வேண்டப்பட்ட நாடு’ என்று பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்திருக்கும் அந்தஸ்தை ரத்து செய்வதாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைகளையும் உரி தாக்குதல் அம்பலப்படுத்தியிருப்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு பலப்படுத்த வேண்டும். ஏற்கெனவே, பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் அரசு, பக்கத்து நாட்டின் பக்குவமற்ற சீண்டல்களுக்கெல்லாம் இரையாகிப் பகுத்தறியாமலும் பொறுப்பில்லாமலும் செயல்பட்டுவிடக் கூடாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in