ராம்நாத் கோவிந்த்: சூழலியல் தூதுவர்!

ராம்நாத் கோவிந்த்: சூழலியல் தூதுவர்!
Updated on
1 min read

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்து விடைபெற்றுள்ள ராம்நாத் கோவிந்த், தனது வழியனுப்பு விழா உரையில், பூமியில் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் மிகப் பெரிய நெருக்கடியாகக் காலநிலை மாற்றத்தைக் கவனப்படுத்தியுள்ளார்.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சுற்றுச்சூழலையும் நிலம், நீர், காற்று ஆகியவற்றையும் பாதுகாக்க அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நமது தினசரி வாழ்வில் மரங்களையும் நதிகளையும் கடலையும், சிகரங்களையும், அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

நாட்டின் முதல் குடிமகனாக நாட்டு மக்களுக்கு வழங்கும் அறிவுரை இது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கோரிக்கை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமல்ல, நாம் வாழும் காலத்தில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து மனிதர்களுக்குமானது. வழியனுப்பு விழா உரையில் மட்டுமின்றி, தமது பதவிக்காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்திகளில், சூழலியல் சார்ந்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய தூதுவராகவே ராம்நாத் கோவிந்த் இருந்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், தற்போது அனைத்துலகையும் எதிர்கொண்டுள்ள மிகப் பெரும் சவால், காலநிலை மாற்றமே என்று குறிப்பிட்டதோடு, இது தொடர்பில் உலகின் பொறுப்புவாய்ந்த குரலாக இந்தியா வளர்ந்துவருவதையும் பெருமிதத்துடன் வெளிப்படுத்தினார்.

அதற்கு உதாரணமாக, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில், 2030-க்குள் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 1 பில்லியன் டன் ஆகக் குறைக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழியையும் நினைவுபடுத்தினார்.

கடந்த ஆண்டு மனித உரிமை தினத்தையொட்டி தேசிய மனித உரிமை ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், சுகாதார சுற்றுச்சூழல் உரிமையையும் காலநிலை நீதியையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

சர்வதேச அளவிலான சூரிய எரிசக்திக் கூட்டணியில் இந்தியா தலைமை வகிப்பதையும் இந்தியாவில் பசுமை எரிசக்திக்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருவதையும் அந்நிகழ்வில் அவர் குறிப்பிட்டார். இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான உயிருக்கும் உடல்சார் உரிமைக்குமான பாதுகாப்பானது, மாசுபடாத சுற்றுச்சூழலையும் உள்ளடக்கியது என்றே இந்திய உச்ச நீதிமன்றம் பொருள்விளக்கம் கொள்கிறது.

இந்தியக் குடிமக்களின் 11 அடிப்படைக் கடமைகளில் இயற்கைச் சூழலை அழியாது பாதுகாத்தலும் உயிரினங்கள் மீது இரக்கங்காட்டுதலும் ஒன்றாகும். இந்திய அரசமைப்பின்படி அரசின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்புவகித்த ராம்நாத் கோவிந்த், சுற்றுச்சூழல் தொடர்பான இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரது உரிமைகளையும் கடமைகளையும் தம் பதவிக்காலம் நெடுகிலும் தொடர்ந்து வலியுறுத்திச் சென்றுள்ளார். அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு அரசு, குடிமக்கள் என இரு தரப்புக்கும் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in