புதின் வெற்றியின் பின்னணி!

புதின் வெற்றியின் பின்னணி!
Updated on
1 min read

ரஷிய நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் அதிபர் விளாதிமிர் புதின் சார்ந்த ஐக்கிய ரஷியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. டூமா என்று அழைக்கப்படும் ரஷிய நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 450 இடங்களில் அவரது கட்சி முக்கால்வாசி இடங்களை கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி ரஷிய அரசியலில் புதினும், அவரது கட்சியும் செலுத்திவரும் ஆதிக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

இத்தேர்தலில் ரஷிய மக்கள் ஆர்வமே காட்டவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். மொத்த வாக்குப் பதிவு 40%-க்கும் குறைவு. 2011-ல் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி கிளர்ச்சி செய்த அலெக்சி நாவல்னிக்குத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் போரிஸ் நெம்ட்சாவ் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். புதினை எதிர்த்து களத்தில் துணிந்து நின்றவர்களில் மக்கள் செல்வாக்குள்ள அரசியல் தலைவர்கள் யாருமே இப்போது இல்லை. எதிராளிகளை இப்படி முடக்கிப்போடும் புதினின் நடவடிக்கைகளைப் பார்த்த மக்களுக்குத் தேர்தலில் வாக்களிக்கும் எண்ணம் குறைந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

ரஷியாவின் தலைமை நிர்வாகப் பதவிக்கு புதின் வருவதற்கு முன்னால், ஒருவித அரசியல் குழப்பமே நீடித்தது. அவர் வந்ததற்குப் பிறகு நிர்வாகம் செம்மையடைந்தது. பொருளாதாரமும் ஓரளவுக்கு வலுப்பட்டது. உக்ரைனிடமிருந்து கிரிமியாவை புதின் பலவந்தமாகப் பறித்துக்கொண்டது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், அதன் மூலம் ரஷியாவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. அதே சமயம், கச்சா பெட்ரோலிய எண்ணெய், பெட்ரோலிய நிலவாயு ஆகியவற்றின் சர்வதேச விலைச் சரிவால் ரஷியா இப்போது கடுமையான பாதிப்பில் சிக்கியிருக்கிறது. இந்த நிலையில் ரஷியா துவண்டுவிடாமலிருக்க புதினின் தலைமை தேவைப்படுகிறது.

தன்னுடைய முதல் இரு ஐந்தாண்டு பதவிக்காலத்தில் ஐரோப்பாவுடன் உறவை வலுப்படுத்தினார் புதின். குறிப்பாக ஜெர்மனியுடன் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்தது. இப்போது கிரீமியா காரணமாக உறவு சுமுகமாக இல்லை. அதே வேளை சீனா, ஈரான் ஆகிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்திவருகிறார்.

60% வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வமே காட்டாத இந்தத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கும் ஓரளவே இடங்கள் கிடைத்துள்ளன. புதினைக் கடுமையாக எதிர்த்து வந்த யப்லோகோ, பர்ணாஸ் என்ற இரு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் நுழையும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ரஷியாவை மீண்டும் நம்பிக்கை வாய்ந்த உலக வல்லரசாக மாற்ற வேண்டும் என்றால் அண்டை நாடுகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டும். ரஷியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்விரண்டுமே புதினுக்குப் பெரிய சவால்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in