கிழக்கு லடாக் எல்லைச் சிக்கல்: நம்பிக்கை வெளிச்சம்!

கிழக்கு லடாக் எல்லைச் சிக்கல்: நம்பிக்கை வெளிச்சம்!
Updated on
1 min read

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரிகளிடையே தொடர்ந்து நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை வெளிச்சத்தை உருவாக்கியுள்ளன.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் படைகளைத் திரும்பப் பெறுவது மட்டுமே அந்தப் பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட வழிவகுக்கும் என்று வலியுறுத்திவருவதாக, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த 16ஆவது கட்டப் பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. எனினும், இருநாட்டு ராணுவ அதிகாரிகளின் கூட்டறிக்கை, பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்வதில் வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படுவதை எடுத்துக்காட்டியுள்ளது. இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை நோக்கியதாகத் தங்களது பேச்சுவார்த்தைகள் அமையும் என்று இக்கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.

2020 மே மாதத்தில் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் இந்தியப் பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவல் முகாம்களை அமைத்ததை இந்திய ராணுவம் தடுத்தது. அடுத்த இரு மாதங்களில் இரு நாட்டுப் படைகளும் பகுதியளவும் பிப்ரவரி 2021-ல் முழுமையாகவும் தங்களது பழைய நிலைக்கே திரும்பின என்றாலும், ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தின.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் அது ஆழ்ந்த ஒரு சங்கடத்தையும் உருவாக்கிவிட்டது. இந்நிலையில், 2021 மார்ச் மாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் யி இருவரிடையே புது டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை இரு நாட்டுக்கும் இடையிலான எல்லைச் சிக்கல்களை அமைதிவழியில் தீர்த்துக்கொள்வதற்கான இந்த வாய்ப்புகளை உருவாக்கியது.

ஆப்கானிஸ்தான், உக்ரைன் உள்ளிட்ட முக்கியமான சர்வதேசப் பிரச்சினைகளைக் குறித்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கல்வி, சுற்றுலா, வர்த்தக உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பானது, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தையின் மூலமாக இணக்கமான தீர்வு காண்பதற்கான பயணத்தின் தொடக்கப் புள்ளியானது.

ஷாங்காய் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 28 மற்றும் 29 தேதிகளில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், இந்திய-சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களிடையே இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரு நாட்டு வீரர்களுமே நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தைகளின் காரணமாகச் சில பகுதிகளில் அவர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in