

கடந்த 2021 ஜனவரியில் தொடங்கிய கரோனா தடுப்பூசி இயக்கம், குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுவரையில் நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசித் தவணைகள் போடப்பட்டுள்ளன என்பது வளரும் பொருளாதார நாடான இந்தியாவுக்குப் பெருமையளிக்கும் விஷயமாகும்.
இது மற்றுமொரு மைல் கல் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியுள்ளார். அக்குறிப்பைப் பகிர்ந்துகொண்டுள்ள பிரதமர், விரைவாகவும் பரந்த அளவிலும் இந்த இலக்கை எட்ட முடிந்ததற்கு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரின் கூட்டு முயற்சியே காரணம் என்று குறிப்பிட்டிருப்பதோடு அறிவியலின் மீது இந்திய மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இது எடுத்துக்காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா இரண்டாவது அலையின்போது மருத்துவ உள்கட்டமைப்பில் இருந்த பலவீனங்களையும் அதன் பாதிப்புகளையும் வருத்தத்துடன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பொதுமுடக்கத்தைத் தவிர, தற்காப்பு நடவடிக்கைகளுக்கு வேறெந்த உடனடித் தீர்வுகளும் அப்போது இல்லாத நிலை.
ஆனால், வெகுவிரைவிலேயே நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் தடுப்பூசிகளை அளிக்கத் தயாராகிவிட்டோம். அதே நேரத்தில், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதில் இன்னமும் ஒருசாராரிடத்தில் மனத்தடை நிலவுகிறது என்பதோடு, தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்களும்கூட நடத்தப்பட்டுவருகின்றன.
கரோனாவின் பாதிப்புகளிலிருந்து நாடு உடனடியாக மீண்டெழ முடிந்ததற்கு நாடு முழுவதும் இரண்டு தவணைகளாக விலையின்றி அளிக்கப்பட்ட தடுப்பூசிகளும் முக்கியமானதொரு காரணம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. மருத்துவமனைகளில் மட்டுமின்றி, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் என்று மக்கள் கூடும் முக்கிய இடங்களிலும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
வார இறுதி நாட்களில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்கள் பெரும் வெற்றியைத் தந்திருப்பதற்குத் திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் காரணமாய் அமைந்தன. மாநிலத்துக்குத் தேவையான தடுப்பூசிகள் போதுமான அளவில் இல்லை என்று தொடக்கத்தில் மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் வெகுவிரைவிலேயே அந்தத் தேக்கநிலை களையப்பட்டுவிட்டது.
இன்று, குறைந்த காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்ற நிலையை இந்தியா உலகுக்கு நிரூபித்துக்காட்டியுள்ளது. எனினும், சுமார் 136 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 200 கோடி தவணைகள் என்பது அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை எட்ட முழுமையாக உதவாது.
முன்னெச்சரிக்கையாக மூன்றாவது தவணை தடுப்பூசியை இலவசமாகப் போடும் இயக்கம் ஜூலை 15 அன்று தொடங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சற்றேறக்குறைய 92% பேர் இன்னும் மூன்றாவது தவணைக்காகக் காத்துள்ளனர். மூன்றாவது தவணையை அரசே இலவசமாக வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமும் இந்தப் பெரும் எண்ணிக்கைக்கு ஒரு காரணம்.
கரோனா தொற்று முழுவதுமாக நீங்கும்வரை அதன் பாதிப்புகளிலிருந்து முன்கூட்டியே பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியின் தேவை தவிர்க்கவியலாதது. கரோனாவின் திரிபடைந்துவரும் புதிய உருமாற்றங்கள் இன்னும் அது குறித்த நீங்காத அச்சத்திலேயே உலகத்தை வைத்திருக்கிறது.
திரிபடைந்த வடிவங்களில் ஒன்றான ‘ஒமைக்ரான் பி.ஏ.5’ பரவி வரும் வேகம் கவலையளிக்கச் செய்கிறது. இந்நிலையில், மூன்றாவது தவணை தடுப்பூசி இயக்கம் உரிய வயதடைந்த அனைவரையும் சென்றுசேர வேண்டும். திட்டமிடப்பட்டுள்ள 75 நாட்களுக்குள் அந்த இலக்கை எட்ட முடியுமா என்பது ஒரு சவாலாகவே முன்னிற்கிறது.