இசைவுத் தீர்வு முறைக்குத் தயக்கம் ஏன்?

இசைவுத் தீர்வு முறைக்குத் தயக்கம் ஏன்?
Updated on
1 min read

சுஷில்குமார் மோடி தலைமையிலான சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இசைவுத் தீர்ப்புமுறை சட்ட முன்வடிவு 2021 குறித்த தமது அறிக்கையை மக்களவை சபாநாயகரிடமும் மாநிலங்களவைத் தலைவரிடமும் சமர்ப்பித்துள்ளது.

உரிமையியல், வணிகம்சார் சச்சரவுகளுக்காக நீதிமன்றங்களையும் தீர்ப்பாயங்களையும் நாடுவதற்கு முன்னர், இருதரப்பும் இசைவுத் தீர்வு முறையில் தங்களுக்குள் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள முயல வேண்டும் என்பதே இச்சட்ட முன்வடிவின் நோக்கமாகும்.

கடந்த 2021 டிசம்பரில் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்ட முன்வடிவு, நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அரசு உயரதிகாரிகள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், இசைவுத் தீர்வாளர்கள், தொழில் துறையினர் ஆகியோரின் கருத்துகளைப் பெற்ற நிலைக் குழு, 10 அமர்வுகள் கூடி விரிவாக விவாதித்தது.

சில சட்டப் பிரிவுகளில் உள்ள தெளிவின்மையைச் சுட்டிக்காட்டியுள்ள நிலைக் குழு, சில முக்கியமான பரிந்துரைகளையும் அளித்துள்ளது. இசைவுத் தீர்வு முயற்சிக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழுவால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் மட்டுமின்றி, மாநில அளவிலும் மத்தியஸ்த அமைப்புகளை உருவாக்கவும் இப்பணியில் ஈடுபடுத்தவும் வேண்டும் என்பது இப்பரிந்துரைகளில் முக்கியமானதாகும்.

அதே நேரத்தில், வழக்கு விசாரணைகளுக்கு முன்பு இத்தகைய இசைவுத் தீர்வு நடவடிக்கைகளைக் கட்டாயமாக்குவது, வழக்கின் முடிவுகளை மேலும் தாமதிக்கச் செய்யும் என்ற கருத்தையும் தெரிவித்திருப்பது விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் உடனடியாக விசாரித்து முடிக்க இயலாத வகையில் வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. புதிய நீதிமன்றங்கள் உருவாக்கம், கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது, கூடுதல் வேலை நேரம் ஆகியவற்றால் வழக்குகளைச் சற்று விரைவுபடுத்த முடியுமே தவிர, உடனடியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற நிலை நிலவுகிறது.

தற்போதைக்கு மாற்றுத் தீர்வு முறைகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்பதே சட்டத் துறை ஆய்வாளர்களின் பொதுக் கருத்தாக இருக்கிறது. ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழுவின் கருத்தோ அதற்கு மாறாக அமைந்துள்ளது. எனினும், இசைவுத் தீர்வு முறையைக் கட்டாயமாக்குவதா வேண்டாமா என்பது குறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது.

வழக்குகளுக்கு முன்பாக மட்டுமின்றி, வழக்கின் தீர்ப்பு திருப்தியளிக்காமல் மேல்முறையீட்டுக்குச் செல்லும் நிலையிலும்கூட இசைவுத் தீர்வை அனுமதிக்க வேண்டும். சட்டரீதியான தீர்வு என்பதற்காக நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்காமல், தரப்பினர்கள் தங்களுக்குள் வழக்கின் எந்த நிலையிலும் பேசித் தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

உரிமையியல் வழக்குகளும் வணிகம்சார் வழக்குகளும் பொருளியலுடன் நேரடித் தொடர்புடையவை என்பதால், அவற்றின் தேக்கம் பொருளியல் நடவடிக்கைகளையும் பாதிக்கக் கூடும் என்ற நோக்கிலிருந்து இச்சிக்கலை அணுகுவதே சரியாக இருக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in