

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணமும் அதைத் தொடர்ந்து கிளம்பியுள்ள தீப்பிழம்புகளும் இந்திய அளவில் கூர்ந்து கவனிக்கப்படும் வருந்தத்தக்க சம்பவங்களாக மாறியுள்ளன.
ஊடகங்களின் அதிவேக வளர்ச்சியும், சமூக ஊடகங்களின் தாக்கமும் சேர்ந்து மக்களை உடனுக்குடன் உணர்வுரீதியாகத் தூண்டிக்கொண்டிருக்கும் நிலையில், எந்தவொரு குற்றம் நிகழ்ந்தாலும் அது குறித்த உடனடியான முதல் அறிக்கையும் அதைத் தொடர்ந்த அவசரமான நடவடிக்கையும் மட்டும்தான் நடந்த சம்பவத்தின் தாக்கம் மேற்கொண்டு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக உருமாறாமல் தடுப்பதற்கான வழிகளாகும்.
குறிப்பிட்ட இந்த கனியாமூர் சம்பவத்தில், கல்வித் துறையும் சரி, காவல் துறையும் சரி, மாணவியின் மரணம் தொடர்பாகத் தகுந்த நடவடிக்கை தங்குதடையின்றி அரங்கேறும் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு அளிக்கும்படியான எந்தச் சமிக்ஞையையும் தரவில்லை.
இதுவே, மாணவியின் பெற்றோர் மட்டுமின்றி, சுற்றுப்புறப் பகுதியில் வசிக்கும் மக்களும் பொறுமையிழந்து போராட்டக் களத்தில் இறங்குகின்ற நிலையை உருவாக்கியது என்பதை மறுக்க முடியாது.
நடந்தவற்றை ஊன்றிக் கவனிக்கும்போது, பள்ளி மீது தாக்குதல் நடத்தி, தீக்கிரையாக்கி பள்ளி மற்றும் காவல் துறையின் வாகனங்களையும் கொளுத்தி, கலவரத்தைத் தடுக்க வந்த காவல் துறையின் மீதும் தாக்குதல் தொடுத்து, கையில் கிடைத்ததை எல்லாம் சூறையாடியும் சென்ற வன்முறைக் கும்பலின் நோக்கம் உரிய நீதி பெறுவது மட்டுமல்ல; ஏதோ ஒரு வகையில் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டதாகவே அமைந்திருந்தது.
வாட்ஸ்அப் மூலமாக இப்படியொரு போராட்டத் தாக்குதலுக்கு அணிதிரட்டுவது வெளிப்படையாகவே நடந்தபோதும் இது குறித்து என்னவிதமான எச்சரிக்கை மணியை அரசு மேலிடத்துக்கு உளவுத் துறை அடித்தது என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
போராட்டம் என்ற பெயரில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாதபடி தங்கள் கைகள் கட்டிப்போடப்பட்டிருந்ததாகக் காவல் துறை தரப்பிலிருந்தே குமுறலும் ஒலித்துள்ளது.
எந்தவொரு போராட்டமோ வன்முறையோ நிகழும்போது அரசியல் கலப்பற்ற, பாரபட்சமற்ற நடவடிக்கையை எடுக்கும்விதமாகவே காவல் துறைக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில வருடங்களாகக் காவல் துறை எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூசுவதும், அரசின் அதிகார அத்துமீறல் என்று தவறான அர்த்தம் கற்பிப்பதும் தமிழகக் கட்சிகளால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவருகிறது. சில ஊடகங்களும் இந்த அரசியல் சாயம் பூசும் முயற்சிக்கு வலுசேர்க்கும் காரணத்தால், காவல் துறை நாளுக்கு நாள் தன்னம்பிக்கை இழந்து ஒருவிதமான மனத்தளர்வுக்கு ஆளாகியிருப்பதாகவே தெரிகிறது.
நடப்பது எதுவானாலும் அதில் எந்தவகையிலும் அரசியல்ரீதியான தலையீடு இருக்காது என்ற உத்தரவாதத்தை அந்தந்தத் துறை அதிகாரிகளுக்கு அளித்தாலே எந்த ஊடகத்தின் நியாயமற்ற குற்றச்சாட்டுக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நியாயம், ஆளுங்கட்சியான பிறகு அதே போன்ற சம்பவங்கள் நடக்கும்போது வேறொரு நியாயம் என்று சூழலுக்கேற்ப லாபம் தேடுவதை யாராக இருந்தாலும் இப்போதாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.
குற்றம் குற்றம்தான்... வன்முறை வன்முறைதான். இதில், வாக்கு வங்கி அரசியலுக்கு இடமே இல்லை என்பதில் ஒவ்வொரு கட்சியும் உறுதியோடு நின்றாலே நடக்க வேண்டியதை அதிகாரிகள் நிச்சயம் சிறப்பாகச் செய்வார்கள். அதிகாரிகளின் நடவடிக்கையில் தாமதமோ தவறோ ஏற்படும்போதுதான் அரசு அதில் தலையிட வேண்டும் என்பதை ஒரு விதிமுறையாகவே கடைப்பிடிக்க வேண்டும்.