

பெரியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை வரலாற்று மாணவர்களுக்கான பருவத் தேர்வு வினாத்தாளில் சாதியத்துக்கு ஆதரவான தொனியில் இடம்பெற்றிருக்கும் கேள்வி பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகைமையில் ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று கேட்கப்பட்டிருக்கும் இந்தக் கேள்வி, கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் நடந்த விடுதலைப் போராட்டங்களைப் பற்றிய பாடத்தில் இக்கேள்வி இடம்பெற்றிருப்பதற்கு எவ்விதமான பொருத்தமும் இல்லை.
விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து சாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களும் நடத்தப்பட்டன என்றாலும் அதைக் குறித்துக் கேள்விகள் கேட்கும்போது, அத்தகைய போராட்டங்கள் நடந்த இடங்கள், தலைவர்கள், ஆண்டு, போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்துக் கேட்கலாமேயொழிய, அத்தகைய வன்கொடுமைகளைச் சந்தித்த மக்கள் யார் என்று மீண்டும் அத்துயரங்களை நினைவுபடுத்துவது மாணவர்களுக்குள்ளேயே ஒருசாராரைச் சங்கடத்துக்கும் அவமதிப்புக்கும் ஆளாக்குவதாகும்.
பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே இப்படி ஒரு கேள்வியா என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக வினாத்தாள்கள் வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து தயாரித்து அனுப்பப்படுகின்றன என்று விளக்கம் அளித்துள்ளார் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.
வினாத்தாள்களின் ரகசியம் காக்க வேண்டி, பல்கலைக்கழகங்கள் இப்படியொரு நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால், வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியர்கள் கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்துவரும் விவாதங்களை மனதில் கொள்ளாமலே இப்படியொரு வினாத்தாளைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது.
தமிழகத்தின் தென்பகுதியில் நடந்த தோள்சீலைப் போராட்டங்களைப் பற்றிய பாடம் என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்து, அதற்கு எதிர்ப்புகள் எழுந்ததையொட்டி விலக்கிக்கொள்ளப்பட்ட விவரங்கள் வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
தேசிய அளவில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய இது போன்ற விவாதங்களைக் கருத்தில் கொள்ளாமல் வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருப்பதற்கு உள்நோக்கம் ஏதேனும் இருக்கலாம் என்று சந்தேகிக்கவும் இடமிருக்கிறது.
குறிப்பிட்ட அந்த வினா இடம்பெற்ற வினாத்தாள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. கேள்விகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இடம்பெற்றிருக்க பதில்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருப்பதையும் அதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்வாணையங்களும் தங்களது வினாத்தாள்களில் கேள்வி, பதில் என இரண்டையுமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு முழுமையாக மொழிபெயர்த்துத் தருவதை வழக்கமாக வைத்திருக்கின்றன.
வினாத்தாள்களின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் தேர்வாணையங்களுக்கே அது சாத்தியமாகிறபோது, குறிப்பிட்ட ஒரு பாடத்தைச் சேர்ந்த வினாத்தாள் தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
வினாக்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் அலட்சியம் காட்டுகிற இந்தப் பேராசிரியர்கள், காலவோட்டத்தில் ஆறிப்போயிருக்கும் வரலாற்று வடுக்களைக் கீறி மாணவர்களின் மனதில் நஞ்சைப் புகட்ட முனைவது கண்டிக்கத்தக்கது. சாதி, மத, பாலின பேதங்கள் கூடாது என்பதுதான் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய முதன்மைப் பாடம். பேதம் பாராட்டுவதை ஊக்குவிக்கும் எந்தவொரு முயற்சியையும் அவை ஆதரிக்கக் கூடாது.