

இந்திய சிறைச்சாலைகள் விசாரணைக் கைதிகளால் நிறைந்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திட, பிணை வழங்குதலுக்குத் தனிச் சட்டத்தை இயற்றுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருப்பது வரவேற்புக்குரியது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள சிறைவாசிகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பேர் விசாரணைக் கைதிகள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள பிணைச் சட்டங்களை மேற்கோள் காட்டியுள்ள நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, இந்தியாவிலும் அப்படியொரு தனிச் சட்டத்துக்கான தேவையை வலியுறுத்தியுள்ளது. மேலும், பிணை கோரும் மனுக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள்ளும், முன்ஜாமீன் மனுக்களுக்கு ஆறு வாரங்களுக்குள்ளும் முடிவெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என அரசுக் கொள்கைகயை விமர்சிக்கும் பல தரப்பினரும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுவரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
குற்றவியல் விசாரணை நடைமுறைகளில் பிணையில் வெளிவரத் தக்க குற்றங்கள், பிணையில் வெளிவர இயலாத குற்றங்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவை பிணை கேட்கும் உரிமையைத் தடுப்பதில்லை. பிணையில் வெளிவரத் தக்க குற்றப்பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு விசாரணை முடியும்வரையிலும் சிறைத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பிணையில் வெளிவர இயலாத குற்றங்களின் கீழ் கைதான ஒருவர், பிணை கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம்.
அவருக்குப் பிணை வழங்கலாமா, கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவுசெய்யும். குற்றம்சாட்டப்பட்டவரின் பிணை கேட்கும் உரிமையைச் சட்ட நடைமுறைகள் எந்த நிலையிலும் மறுக்கவில்லை.
ஆனால், பொதுவாக கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் குற்றவியல் வழக்கு விசாரணைகளில் தண்டனை அளிக்கப்படும் விகிதம் குறைவாக இருப்பதால், அதற்கு மாற்றாக, விசாரணை நிலையிலேயே சிறைப்படுத்தி வைத்திருப்பது ஒரு உத்தியாகக் கையாளப்பட்டுவருகிறது. இது குற்றவியலின் அடிப்படைத் தத்துவத்துக்கு எதிரானதாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியைப் போல, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் தண்டிப்பதில் நியாயம் இல்லை. குற்றம்சாட்டப்பட்டவரை வெளியில் விடுவது, அவர் மேலும் குற்றங்களைச் செய்ய வாய்ப்பாக இருக்கும் அல்லது சாட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது போன்ற வலுவான காரணங்கள் எதுவும் இல்லாமல் விசாரணை நிலையில் யாரையும் சிறைப்படுத்தி வைக்கக் கூடாது.
சிறைச் சீர்திருத்தங்கள் குறித்து உலகம் முழுவதுமே தீவிர விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. குற்றவாளிகளைத் தடுத்துவைத்தல் என்ற கோட்பாட்டுக்கு மாறாக, குற்றவாளிகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கோட்பாடு தண்டனையியலில் செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. இந்த உலகளாவிய விவாதத்தை இந்தியச் சூழலில் வளர்த்தெடுக்க உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய வழிகாட்டல் உதவியாக அமையும்.
குற்றவியல் வழக்குகளில் விசாரணைக் கைதிகள் பலரும் பிணையில் வெளிவருவதற்கான சட்ட நடைமுறைகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது துரதிர்ஷ்டம். ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் குற்றவியல் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதோடு, பொருளாதாரரீதியில் பின்தங்கியிருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச சட்ட உதவிகளை இன்னும் மேம்படுத்தவும் வேண்டும்.