அந்நிய முதலீடுகளில் தேக்கநிலை கூடாது!

அந்நிய முதலீடுகளில் தேக்கநிலை கூடாது!
Updated on
1 min read

ஐக்கிய நாடுகள் அவையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (யுஎன்சிடிஏடி) அண்மையில் வெளியிட்டுள்ள உலக முதலீடுகள் பற்றிய அறிக்கை-2022, வளரும் நாடுகள் பெருந்தொற்றின் காரணமாக அந்நிய முதலீடுகளைப் பெறுவதில் அடைந்த தேக்க நிலையிலிருந்து மெல்ல மீண்டுவருவதை எடுத்துக்காட்டியுள்ளது.

2020-ல் அந்நிய நேரடி முதலீடுகள் 35% சரிந்து, 2021-ல் 64.3% அளவுக்கு உயர்ந்துள்ளன. நடப்பாண்டில் அது மேலும் உயரும் என எதிர்பார்க்கலாம். ஆனால், உலகளவில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளை விடவும் ஆசிய நாடுகள் பின்தங்கியே உள்ளன.

ஒப்பீட்டளவில், மேற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைக் காட்டிலும் தெற்காசிய நாடுகள் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின்தங்கியுள்ளன. அந்நிய முதலீடுகளைப் பெறுவதில் சீனா தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்க, இந்தியா சற்று தேக்கநிலையைச் சந்தித்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

2019-க்கும் 2021-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், ஹாங்காங் பிரதேசத்தையும் உள்ளிட்ட சீனாவில் செய்யப்படும் அந்நிய முதலீடு 14.5%-லிருந்து 20.3% ஆக உயர்ந்துள்ளது. வளர்ந்த நாடுகள் சீனாவுடனான வர்த்தக உறவுகளில் கடுமை காட்டுவதாகக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவை சீனாவில் அதிகளவில் முதலீடு செய்கின்றன. இதே காலகட்டத்தில், இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய முதலீடு 3.4%-லிருந்து 2.8% ஆகக் குறைந்துள்ளது.

இதையடுத்து, வளரும் நாடுகளுக்கு பெருந்தொற்றுக் காலத்தில் கிடைத்த அந்நிய முதலீட்டு வாய்ப்புகளை இந்தியா இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என்ற நோக்கிலும் சில விமர்சனப் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.

2021-ல் மொரீஷியஸிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் அந்நிய முதலீடுகள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. இந்தியாவுக்குப் பெருமளவிலான அந்நிய நேரடி முதலீடு மொரீஷியஸ் வழியாகவே வந்துசேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து செய்யப்படும் முதலீடுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.

ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கியமான நாடுகள், இந்தியாவில் தங்களது அந்நிய முதலீடுகளைக் குறைத்துக்கொண்டுள்ளன. கணினி மென்பொருட்கள், கட்டுமானத் துறையில் முதலீடுகள் குறைந்துள்ள போதிலும் நிதி, வங்கிச் சேவைகள், காப்பீடு, ஆராய்ச்சி ஆகிய சேவைப் பணித் துறைகளில் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறிய அளவில் அதிகரித்துள்ளன.

உற்பத்தித் தொழில் முறையில் இந்தியா அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடிந்ததற்கான காரணம், வாகன உற்பத்தியும் மருந்துப்பொருட்கள் உற்பத்தியும் பெற்றுள்ள சிறப்பிடம்தான். ஆனால், உலக முதலீட்டுச் சந்தையில் இந்தியா தொடர்ந்து பயன்பெறுவதற்கு அதன் உற்பத்தித் தொழில் துறையை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

வளரும் நாடுகளில் உள்நாட்டு முதலீடுகளைத் திரட்டுவது என்பது பெரும் சவாலாக இருப்பதால், அந்நிய முதலீடு அதற்கான தற்காலிகத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. உள்நாட்டுத் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் எளிதாகும் வரையில், அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைத் தவறவிட்டுவிடக் கூடாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in