சமையல் எண்ணெய் விலை எப்போது குறையும்?

சமையல் எண்ணெய் விலை எப்போது குறையும்?

Published on

சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெயின் விலை குறைந்த பின்னும், இந்தியாவில் அவற்றின் சில்லறை விலை இன்னும் குறையவில்லை.

அண்மையில், சமையல் எண்ணெய்த் தொழில் துறையினரை அழைத்துப் பேசியிருக்கும் மத்திய உணவுத் துறை அமைச்சகம், சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெயின் விலை குறைந்திருப்பதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால், சமையல் எண்ணெயின் சில்லறை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 வரையிலும் குறைய வாய்ப்புள்ளது. மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலைச் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள் காலம் தாமதிக்காது உடனடியாகப் பின்பற்ற வேண்டும்.

இந்தியாவின் வருடாந்திர சமையல் எண்ணெய்ப் பயன்பாடு சுமார் 23 மில்லியன் டன். இவற்றில் சுமார் 9 மில்லியன் டன் மட்டுமே இந்தியாவில் உற்பத்தியாகிறது. எஞ்சியுள்ள எண்ணெய்த் தேவைக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது.

இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளிலிருந்து பாமாயிலும் அர்ஜென்டினா, பிரேசில், அமெரிக்காவிலிருந்து சோயா எண்ணெயும் உக்ரைன், ரஷ்யாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயும் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது.

கரோனா பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மலேசியாவின் பாமாயில் சாகுபடியும் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. இந்தோனேஷியா, பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் பாமாயில் அளவு ஏறக்குறைய 60% என்பதால், இதன் பாதிப்பு தீவிரமாக உணரப்பட்டது. போர் காரணமாக, உக்ரைனின் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.

தற்போது நிலைமை கொஞ்சம் மாறத் தொடங்கியிருக்கிறது. பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை இந்தோனேஷியா விலக்கிக்கொண்டுள்ளது. உக்ரைனிலிருந்து போலந்து வழியாக தரைமார்க்கமாக சூரியகாந்தி ஏற்றுமதி தொடங்கியுள்ளது. இவற்றின் விளைவாக, சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெயின் விலை படிப்படியாகக் குறைய ஆரம்பித்துள்ளது.

கடந்த மாதத்தில் பாமாயில் 33% வரையிலும், சோயா எண்ணெய் 24% வரையிலும் சூரியகாந்தி எண்ணெய் 14% வரையிலும் விலை குறைந்துள்ளது. மேலும், இந்தியாவில் பாமாயில் இறக்குமதிக்கான சுங்கத் தீர்வையைத் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதன் காரணமாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் சமையல் எண்ணெயின் அளவு இம்மாதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படவிருப்பது ஜூலை மாதத்தில்தான்.

உடனடியாகச் சில்லறை விலையைக் குறைக்க முடியாததன் காரணங்களையும் தொழில் துறையினர் முன்வைக்கின்றனர். கடந்த சில மாதங்களின் சர்வதேச விலையையும் கணக்கில் கொண்டு, அதற்கேற்பவே சராசரி விலையை நிர்ணயிக்க முடியும் என்பது அவர்களின் வாதம்.

சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து சில்லறை விலையைக் குறைத்துள்ளன என்றாலும், அவற்றின் பயன் மக்களுக்கு இன்னும் முழுதாகக் கிடைக்கவில்லை. சில்லறை விற்பனையில், அதிகபட்ச சில்லறை விலையைப் பின்பற்றுவதே பொதுவழக்கமாக இருப்பதால், சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையையும் விரைவில் குறைத்தாக வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in