

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் பொருளாதார நெருக்கடிகள், அந்நாட்டு மக்களைக் கொந்தளிப்புக்கு ஆளாக்கியிருக்கின்றன. கட்டுக்கடங்காத அவர்களின் கோபம் அதிபர் மாளிகையைக் கைப்பற்றியிருப்பதோடு, பிரதமர் அலுவலகத்தைத் தீக்கிரையாக்கியுள்ளது.
சமீபத்தில் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே, பதவியிலிருந்து விலக மறுத்துவந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச இருவரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். இலங்கையில் அரசு இயந்திரம் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டது. இனி, பொருளாதார நெருக்கடிகளோடு அரசியல் நெருக்கடிகளிலிருந்தும் அந்நாடு மீண்டு வர வேண்டும்.
கடந்த ஏப்ரலில், காலி முகத்திடலில் தன்னெழுச்சியாக நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தின்போதே இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வினைக் கண்டிருக்க முடியும். ஆனால், அமைதிவழியில் தொடர்ந்து நடைபெற்ற அந்தப் போராட்டம், வன்முறையாக மாற்றப்பட்டு வலுவிழக்கச் செய்யப்பட்டது.
இப்போது மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் தப்பித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி ஒரே நாளில் உருவானதல்ல. இதன் வேர்களைத் தேடினால், அது உள்நாட்டு யுத்தத்தின் காரணமாகக் கடந்த சில பத்தாண்டுகளாக எடுக்கப்பட்டுவந்த தவறான முடிவுகளின் தொடர் விளைவுகளாகும்.
உள்நாட்டு யுத்தங்களை அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்வுகாண முடியாதநிலையில், இலங்கை தமது விருப்பத்துக்கேற்ப வெளியுறவுக் கொள்கையை வகுத்துக்கொண்டது. அதன் விளைவாக, வெளிநாடுகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.
இனத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் மக்களைப் பிளவுபடுத்துவது எளிது. அதன் வாயிலாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் எளிது. ஆனால், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத எந்தவொரு அரசும் அரசதிகாரத்தை வழங்கிய மக்களாலேயே தூக்கியெறியப்படும்.
இது இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஓர் எச்சரிக்கை. குடும்ப அரசியல், ஊழல் என மக்களாட்சி நாடுகளில் புரையோடத் தொடங்கியுள்ள அனைத்துத் தீங்குகளுக்கும் இலங்கை நிலவரங்கள் நிச்சயமாக ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று இலங்கை நிலைகுலைந்து நிற்கும் சூழலிலும் அந்நாட்டு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்ற நம்பிக்கை வார்த்தைகளை இந்தியா அளித்துள்ளது. இலங்கையில் ஜனநாயகம் உறுதிசெய்யப்பட்டு, விரைவில் அங்கு புதிய அரசு பொறுப்பேற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அமைதியான முறையில் உருவாக வேண்டும். பொருளாதாரரீதியில் மற்ற நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்தாலும், அரசியல்ரீதியிலான அமைதி மக்களின் கைகளில்தான் இருக்கிறது.
பொருளாதாரரீதியில் நெருக்கடிகளை எதிர்கொண்ட நாடுகள், தங்களது தொலைநோக்குத் திட்டங்களாலும் செயல்திறனாலும் அத்தடைகளை வெற்றிகண்ட முன்னுதாரணங்கள் நிறையவே உண்டு. அண்மைய உதாரணம், கிரீஸ். கடன் உள்ளிட்ட அனைத்துப் பொருளாதார நெருக்கடிகளையும் ஒருசேர எதிர்கொண்டு, அவற்றிலிருந்து மீண்டுள்ளது.
இலங்கைக்கும் அது சாத்தியம். கல்வியும் உழைப்பும் தியாகமும் நிறைந்த இலங்கை மக்கள் தங்களது நெருக்கடிகளிலிருந்து விரைவில் மீண்டெழுவார்கள். மற்ற நாடுகளைப் போல அரசியல், பொருளாதாரக் கணக்கீடுகளும் உள்நோக்கங்களும் இல்லாமல் இந்தியா அதற்கு எப்போதும்போல உறுதுணையாக நிற்கும்.