

கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன், இந்திய அரசமைப்பை அவமதித்துப் பேசியதையடுத்து, அங்கு எழுந்துள்ள சர்ச்சைகள், அவர்மீது பதிவாகியுள்ள குற்றவியல் புகார் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
‘அரசமைப்பின் வழி நடப்பேன் என்றும் அதைப் பாதுகாப்பேன்’ என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அரசமைப்பை அவமதிப்பது என்பது எந்தவகையிலும் நியாயமாகாது. அரசமைப்பு இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அதைக் குறித்துப் பல்வேறு கோணங்களிலிருந்து விவாதங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
ஆனால், அவை விமர்சனங்களாக இருக்கின்றன. அந்த விமர்சனங்களிலிருந்து அரசமைப்புத் தத்துவம் தன்னை மேலும் செழுமைப்படுத்திக்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் அவ்வப்போதைய அரசமைப்புத் திருத்தங்களும் அரசமைப்பின் புதிய தேவைகளை நிறைவுசெய்தவண்ணம் முன்னகர்ந்துகொண்டே இருக்கின்றன.
‘இந்திய அரசமைப்பு பிரிட்டிஷ்காரர்களால் வடிவமைக்கப்பட்டது, தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது’ என்ற ஷாஜி செரியனின் வார்த்தைகள், இந்திய அரசமைப்பு குறித்த அவரது அறியாமையைத்தான் எடுத்துக்காட்டுகிறது. இந்திய அரசமைப்பு, நாடாளுமன்ற அமைப்பு முறையை பிரிட்டிஷ் அரசமைப்பிலிருந்து தழுவிக்கொண்டிருந்தாலும் பல்வேறு நாடுகளின் அரசமைப்புகளில் உள்ள சிறப்புக் கூறுகளையும் உள்ளடக்கிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், உலகளவில் அரசமைப்பின் நவீனத்துவ அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்திய அரசமைப்பு விளங்குகிறது. சமநிலைச் சமுதாயம் என்ற தத்துவத்தைத் தனது பிரதான உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் இந்திய அரசமைப்பு, 42-வது அரசமைப்புத் திருத்தத்தில் அச்சொல்லைத் தனது முகப்புரையிலும் ஏற்றுக்கொண்டுள்ளது.
உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான உரிமையும் சங்கங்களை அமைக்கும் உரிமையும் இந்திய அரசமைப்பு அளித்திருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று. உழைப்புக்கேற்ற கூலி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் என்று அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் அறிவுறுத்துகின்றன.
தொழிலாளர்கள் நலன் நாடும் பொதுவுடைமைக் கட்சியினரின் அடிப்படைக் கொள்கைகள் இவை. அரசமைப்பின்வழி உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அத்தகைய சூழல்களில் தீர்வு வேண்டி நீதிமன்றங்களை நாடலாம் என்பதும்கூட அரசமைப்பின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையே.
அரசை நெறிமுறைப்படுத்தும் கோட்பாடுகளைப் பொறுத்தவரை, அவற்றை நிறைவேற்றுவதற்காக யாரும் நீதிமன்றங்களை நாட முடியாது. அரசுப் பொறுப்பை ஏற்பவர்கள் தாங்களாக முன்வந்துதான் அவற்றை நிறைவேற்றியாக வேண்டும். ஆளுங்கட்சியாக உள்ளவர்களுக்குத்தான் அந்தப் பொறுப்பு இருக்கிறது.
கேரளத்தில் ஆட்சியிலுள்ள இடதுசாரி முன்னணி அரசமைப்புக்கு இணங்க, தொழிலாளர்களின் நலன் நாடும் அரசமைப்புக் கூறுகளை நடைமுறைப்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. இருந்தும் அரசமைப்பின்மீது பழியைப் போடுவதற்கு மனம் துணிந்தது ஏன் என்று தெரியவில்லை.
மத்திய-மாநில உறவுகள், இடஒதுக்கீடு, ஆட்சி மொழி, பொது சிவில் சட்டம் குறித்த அரசமைப்புக் கூறுகள் இப்போதும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகின்றன.
மாற்றுக் கருத்துகள் இருந்தபோதும் அரசமைப்பை யாரும் முற்று முழுதாக நிராகரிப்பதில்லை. ஏனெனில், இந்திய அரசமைப்பு கூறுகளுக்கும் அட்டவணைகளுக்கும் அடங்கிவிடக் கூடியதல்ல; அது காலந்தோறும் வளர்ந்துகொண்டிருக்கும் தத்துவம். மக்களின் நலன் நாடுவதொன்றே அதன் நோக்கம்.