Published : 05 May 2016 09:00 AM
Last Updated : 05 May 2016 09:00 AM

வானளாவிய சாதனை!

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் அபாரமான சாதனையைச் செய்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ). கடல்சார் ஆராய்ச்சிக்கான ‘ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி’ செயற்கைக்கோள்  ஹரிகோட்டாவிலிருந்து வியாழன் அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடல்சார் ஆராய்ச்சிக்காக, ஏழு செயற்கைக்கோள்கள் அடங்கிய செயற்கைக்கோள் தொகுப்பை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. அதன்படியான, ஏழாவதும் இறுதியானதுமானதே இந்தச் செயற்கைக்கோள்!

2013 ஜூலையில் முதலாவது செயற்கைக்கோளான ‘ஐஆர்என்எஸ் எஸ்-1ஏ’ செலுத்தப்பட்டது. தற்போது, ஏழாவது செயற்கைக்கோளும் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடல்சார் ஆராய்ச்சி செயற்கைக்கோள்களில் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்திருக்கிறது. கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கைச் சீற்றம், பேரிடர் மேலாண்மை போன்ற கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்கும் செயற்கைக்கோள் இது. இடஞ்சுட்டி (ஜிபிஎஸ்) தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றம் அடையும். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்கும் இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோள் மூலம், இந்தியா முழுவதையும் கண்காணிப்பதுடன் நாட்டின் எல்லையைத் தாண்டி 1,500 சதுர கி.மீ. தொலைவு வரையிலும் கண்காணிக்க முடியும்.

செயற்கைக்கோள் தொகுப்பான இந்த ஏழு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட்டு, சோதித்துப் பார்க்கப்பட்ட பின்னர், மூன்று அல்லது ஆறு மாதங்களில் இவை செயல்படத் தொடங்கும். தற்சமயம், ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களில் ஏதேனும் கோளாறு ஏற்படும் பட்சத்தில், மாற்று செயற்கைக்கோள்கள் இதுவரை செலுத்தப்படவில்லை. எனினும், அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாகச் செலுத்தப்பட என்று இரண்டு செயற்கைக்கோள்கள் கைவசம் இருக்கின்றன.

அமெரிக்காவிடம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட 24 செயற்கைக் கோள்களின் தொகுப்பு உள்ளது. இது 1993-ல் செயல்படத் தொடங்கியது. இதன் சேவையைப் பல நாடுகள் ஜிபிஎஸ் சேவைக்குப் பயன்படுத்துகின்றன. ரஷ்யாவின் ‘குளோபல் நேவிகேஷன் சிஸ்டம்’(குளோனாஸ்) எனும் பெயரிலான ஜிபிஎஸ் செயற்கைக்கோள் தொகுப்பும் பல நாடுகளால் பயன் படுத்தப்படுகிறது. ‘பெய்டோவ்’ எனும் பெயரிலான சீனாவின் செயற்கைக் கோள் தொகுப்பு 2012-ல் செயல்படத் தொடங்கியது. உள்நாட்டுப் பயன் பாட்டுக்கு மட்டுமே செயல்படும் சீன செயற்கைக்கோள் தொகுப்பு 2020-ம் ஆண்டுவாக்கில் உலகளாவிய பயன்பாட்டுக்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் பயன்படத்தக்கதாக உருவாக்கப்பட்டுவரும் ஐரோப் பாவின் செயற்கைக்கோள் தொகுப்பான கலிலியோ 2019-2020-ம் ஆண்டு வாக்கில்தான் செயல்படத் தொடங்கும். ஜப்பானும் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. பொதுமக்கள் பலரின் அன்றாட வாழ்க்கையில் ஜிபிஎஸ்ஸின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது. இந்தியாவின் செயற்கைக்கோள் தொகுப்பால் நம்பகத்தன்மை மிக்க, துல்லியமான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஜிபிஎஸ்ஸை நம்பியிருக்க வேண்டியதில்லை என்பது முக்கியமான முன்னேற்றம். கார்கில் போரின்போது அமெரிக்க ஜிபிஎஸ்ஸை நம்பியதன் மூலம் சிக்கலான தருணங்களில் இந்திய ராணுவம் சற்றுத் திணறியது குறிப்பிடத் தக்கது.

பொதுவாகவே, ஐஆர்என்எஸ்எஸ், ஜிபிஎஸ், குளோனாஸ் போன்ற இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பின் பயன்பாடு நகர்ப்புறங்கள், மலைப் பகுதிகளில் அதிகம் தேவைப்படுகிறது. இதன்மூலம், துல்லியமாகத் திட்டமிட முடியும். ஸ்மார்ட்போன்களில் இதன் பயன்பாடு பல நன்மைகளைத் தரும். இந்த நிலையில், இந்தியாவின் ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள் தொகுப்பு செயல்படத் தொடங்கிய பின்னர், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்திய விண்வெளித் துறை நிகழ்த்தியிருக்கும் மிகப் பெரும் பாய்ச்சல் இது என்றே சொல்லலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x