

இயக்குநர் லீனா மணிமேகலையின் சமீபத்திய படைப்பான ‘காளி’ திரைப்படத்துக்கான விளம்பரம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. மத உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பதாக அவர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
விளம்பரங்களின் நோக்கம் கவன ஈர்ப்பே என்ற நோக்கில் பார்த்தால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காவல் துறையிடம் அளிக்கப்பட்டுவரும் புகார்களின் காரணமாகச் சர்வதேச அளவில் இந்தத் திரைப்படத்துக்கு விளம்பரம் கிடைத்துவிட்டது. அதே நேரத்தில், ஒரு படைப்பாளரின் கருத்துச் சுதந்திரம், பொறுப்புகள் குறித்து மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது.
இந்திய நிலப்பரப்பு முழுவதுமே தாய்த் தெய்வ வழிபாடு வழக்கத்தில் இருக்கிறது. வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வடிவங்களில் பெண் தெய்வங்களை மக்கள் வணங்கிவருகின்றனர். மக்களுக்கும் தாய்த் தெய்வ வழிபாட்டுக்கும் இடையிலான உறவு, ஒற்றைச் சமய அடையாளத்துக்குள் அடங்குவதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழிபாடுகளிலும் வித்தியாசங்கள், வேறுபாடுகள் நிறையவே உண்டு. சமய அடையாளம் என்பதைத் தாண்டி, பண்பாட்டுத் தொடர்ச்சி என்பதாகவே தாய்த் தெய்வ வழிபாட்டை அணுக வேண்டும். அதே நேரத்தில், இந்த வழிபாடுகளும் சடங்குகளும் சமய நம்பிக்கைக்கும் இடமளிக்கின்றன என்பதையும் தவிர்த்துவிட முடியாது.
நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே இச்சடங்குகளைக் கருதும் ஒருவர், அது கலைப்படைப்பாக வெளிப்படும் தருணத்தில் பதற்றங்களுக்கு ஆளாகிறார். தற்போது ‘காளி’ திரைப்படத்தின் விளம்பரங்கள் குறித்து எழுந்திருக்கும் சர்ச்சைகளிலும் இந்தப் பதற்றங்களே பின்னணிக் காரணமாக இருக்கிறது.
நாட்டார் வழிபாடுகள், சடங்குகள் குறித்து வெளிவந்துள்ள பல்வேறு ஆவணப்படங்களில் அக்காட்சிகள் அவற்றின் இயல்புடனேயே பதிவாகியிருக்கின்றன. நாட்டார் வழிபாட்டுடன் இணைந்து நடத்தப்படும் நிகழ்த்துக் கலைகளின் உரையாடல்களில் பெரும் சுதந்திரத்தைக் கிராமப்புறக் கலைஞர்கள் அனுபவித்துவருகின்றனர். அவையும்கூட ஆவணப்படங்களில் பதிவாகியிருக்கின்றன.
ஆனால், அந்தப் படங்களை விளம்பரப்படுத்துவதற்கு அத்தகைய காட்சிகள் பயன்படுத்தப்பட்டதில்லை. மக்கள் திரளால் பெருவாரியாக ரசிக்கப்படும் வணிகத் திரைப்படங்களில், பெருந்தெய்வங்கள் எவ்வளவோ கேலிக்கு ஆளாக்கப்படுகின்றன. பக்திப் படங்களும் விதிவிலக்கு அல்ல.
அப்போதெல்லாம் கலைஞர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், அவற்றின் நோக்கம் பொழுதுபோக்கின் மற்றொரு அம்சமாக இருக்கிறதேயொழிய அதிர்ச்சி மதிப்பீடுகளையும் விளம்பரத்தையும் எதிர்பார்த்து அவை செய்யப்படவில்லை என்பதுதான்.
கலைப் படைப்புகளின் நோக்கம் கருத்தில் கொள்ளப்படுவதைப் போலவே, அவற்றுக்கான எதிர்ப்பின் நோக்கங்களும்கூடக் கருத்தில் கொள்ளப்படத்தான் வேண்டும். தற்போது ‘காளி’ படத்தின் விளம்பரம் சார்ந்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்குச் சமய நம்பிக்கையைத் தாண்டி அரசியல் காரணங்களும் இருக்கலாம்.
இந்தியாவின் எந்தப் பகுதியில் வெளியாகும் எந்தவொரு கலைப்படைப்புக்கு எதிராகவும் டெல்லி, உத்தர பிரதேசம் என்று வெவ்வேறு மாநிலங்களில் காவல் துறையிடம் புகார்களை அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில், கலைஞர்கள் தங்களது கருத்துச் சுதந்திரத்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
உணர்வுகளை வெளிப்படுத்த சுதந்திரம் உண்டு எனும் பட்சத்தில், அது புண்படும்போது எதிர்க்கின்ற உரிமையும் இருக்கும்தானே!