

தொழில் வளர்ச்சிக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் மத்திய அரசின் அணுகுமுறையானது, தொழில் தொடங்குவதற்கான உரிமங்களைப் பெறுவதில் ஒற்றைச் சாளர முறை அறிமுகம், தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு மாறாகப் புதிய சட்டத் தொகுப்புகள் எனத் தொடங்கி, தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் தண்டனைப் பிரிவுகளைத் திருத்தம் செய்யும் அளவுக்கு வந்திருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்று மாசுபாடு தடை மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1986, தண்ணீர் மாசுபாடு தடை மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1974 ஆகிய மூன்று சட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை நீர்த்துப்போகச் செய்யும்வகையில் திருத்தங்களைச் செய்ய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் சட்டங்களின் பிரிவுகளை முதன்முறையாக மீறுவதற்கு 5 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை விதிக்கும் பிரிவுகளை நீக்கி, அதற்குப் பதிலாக ரூ.1 லட்சம் வரையிலுமான அபராதத்தை ரூ.5 லட்சம் வரையிலும் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சட்டமீறல் தொடரும்பட்சத்தில், இழப்புகளுக்கு ஏற்றபடி விதிக்கப்படும் அபராதத்தின் அளவும் உயர்த்தப்படும்; சட்டத்தை மீறியவர் அபராதத்தைச் செலுத்தாவிட்டால் மட்டுமே அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் அதற்கு எதிரான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யவும் வகைமுறைகளை உருவாக்க முடிவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தொடர்விளைவுகளால் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துவரும் இந்தியா, முன்னெப்போதைக் காட்டிலும் சுற்றுச்சூழல் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டிய நிலையிலிருக்கிறது.
ஆனால், அதற்கு நேரெதிராகச் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுவோருக்கான தண்டனைகளை அபராதமாக மட்டுமே மாற்றுவதும் மேல்முறையீட்டுக்கான வாய்ப்புகளைக் கூடுதலாக உருவாக்குவதும் தண்டனைப் பிரிவுகளை மட்டுமின்றி, அச்சட்டங்களின் நோக்கத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்து உள்ளது.
வளரும் பொருளாதார நிலையில் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், தொழில் துறையின் வளர்ச்சி அரசால் ஆதரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சிக்காகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாகச் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை.
தற்போது பரிந்துரைக்கப்படும் திருத்தங்களின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி என்ற பெயரில் சிறப்பு நிதி உருவாக்கப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செல்பவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை அந்நிதியில் சேர்க்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அந்நிதி செலவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
சிறைத் தண்டனைகளை நீக்கியும் குறைத்தும், அதற்குப் பதிலாக அபராதத்தை உயர்த்தியும் திருத்தங்களை மேற்கொள்வதானது, சுற்றுச்சூழல் சட்டங்கள் மீது தொழில் துறையினர் கொண்டிருக்கும் அச்சத்தைப் போக்கும் என்பது ஒருகாலும் இத்திருத்தங்களுக்கான நியாயம் ஆகாது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களே அதன் பாதிப்புகள் அனைத்தையும் முழுமையாகச் சரிசெய்ய வேண்டும் என்ற கடும்பொறுப்பு விதியை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் பின்பற்றிவருகின்றன. நீதிமன்றங்களால் உறுதிப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றைப் பலவீனப்படுத்தும் இந்தச் சட்டத்திருத்த யோசனையை மத்திய அரசு கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.