

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகள் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருப்பது, பழங்குடியினருக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதோடு, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அடையாளமாகவும் அமைந்துள்ளது.
இது வெறும் அடையாள அரசியலே, இதனால் பழங்குடியினரின் வாழ்க்கை நிலையில் எவ்வித மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என்றொரு விமர்சனமும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்துள்ளது. அதுபோலவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினப் பெண்ணை ஆதரிக்கும் கட்சிகள், உச்ச நீதிமன்றம் போன்ற உயர் அதிகாரப் பதவிகளில் பட்டியல் இனத்தவரையும் பழங்குடியினரையும் நியமிக்காதது ஏன் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
இந்தக் கேள்விகள், நீதித் துறையிலும் அரசியல் துறையிலும் பெண்களும் சமவாய்ப்புகளைப் பெறுவதற்கு இதுவரை ஏன் போதுமான அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்ற விவாதத்தை நோக்கி இட்டுச்செல்கின்றன.
உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண், முதன்முதலாகப் போட்டியிடுகின்ற இந்த நேரத்தில், உலகின் மிக மூத்த மக்களாட்சி நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதலாவது பெண் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, 9 பேர் கொண்ட அந்நீதிமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண் நீதிபதி பதவியேற்கும் நாளுக்காக இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்; தற்போது தலைமை நீதிபதி உட்பட பதவி வகிக்கும் 32 நீதிபதிகளில் பெண்களின் எண்ணிக்கை 4 மட்டுமே. அதுவும்கூட, 2021 ஆகஸ்ட் 31 அன்று ஒரே நாளில் 3 பெண் நீதிபதிகள் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட பிறகுதான்.
அவர்களில் ஒருவர் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்புள்ளது என்றாலும், ஒரு சில மாதங்களே அவர் அந்தப் பதவியில் நீடிப்பார்.
உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் நீதிபதியாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுகின்ற மிகச் சில பெண்களும் பெரும்பாலும் வழக்கறிஞர் தொழிலில் பாரம்பரியமான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து முதல் தலைமுறையினராக வழக்கறிஞர் பணியாற்றுவது என்பது இன்னமும் பெருஞ்சவாலாகத்தான் தொடர்கிறது.
குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் இளம் பெண் வழக்கறிஞர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் வாதிடும் வாய்ப்புகளே தற்போதுதான் முகிழ்க்கத் தொடங்கியுள்ளன. அரசியல் களத்திலும் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்கும் சூழல் இதுவரையில் உருவாகவில்லை.
பெண்களின் விகிதாச்சாரம் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் உறுதிசெய்யப்படாத நிலையே நீடிக்கிறது. சட்டம் இயற்றும் அவைகள், நீதித் துறை என்று அரசின் அனைத்து அங்கங்களிலும் பெண்களுக்குச் சம வாய்ப்புகள் சாத்தியமாகும் நாள் வரையில், அடையாளரீதியிலாவது அவர்களை முதன்மைப்படுத்தத்தான் வேண்டும்.