தொழில்வளம் பெருகட்டும்...வேலைவாய்ப்பு அதிகரிக்கட்டும்!

தொழில்வளம் பெருகட்டும்...வேலைவாய்ப்பு அதிகரிக்கட்டும்!
Updated on
1 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் வெளியிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தொழில் துறை சீர்திருத்தச் செயலாக்கம் தொடர்பான அறிக்கையில், முதலீடுகள் செய்வதற்கு மிகவும் ஏற்ற 7 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாக இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகம், பஞ்சாப், தெலங்கானா ஆகியவை மற்ற 6 மாநிலங்களாகும். 2020-ம் ஆண்டின் தொழில் துறைச் சீர்திருத்தச் செயலாக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் அடிப்படையில், தமிழ்நாடு இந்தச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.

தேவையான தகவல்களை எளிதாகப் பெறும் வாய்ப்பு, ஒற்றைச் சாளர முறை, தொழிலாளர் மற்றும் நில நிர்வாகம் உள்ளிட்ட 15 முக்கியப் பிரிவுகளில் மொத்தம் 301 சீர்திருத்தங்களை இத்திட்டம் உள்ளடக்கியிருந்தது. பின்பு, மேலும் 118 புதிய சீர்திருத்தங்கள் இதனுடன் இணைக்கப்பட்டன.

2014-லிருந்து மத்திய தொழில் துறை மற்றும் வாணிபத் துறை அமைச்சகம் முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலைத் தரவரிசை முறையில் வெளியிட்டுவருகிறது. இதற்கு முன்பு நான்கு தரவரிசைப் பட்டியல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அதற்குப் பதிலாக உச்சபட்சச் சாதனையாளர்கள், சாதனையாளர்கள், சிறந்த முயற்சியாளர்கள், வளர்ந்துவரும் வாணிபச் சூழல் என்ற வகைப்பாட்டில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தொழில் துறை சீர்திருத்தங்களின் வாயிலாக முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்த்தெடுக்கவும் முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்களை அடையாளப்படுத்துவதுமே இந்த வகைப்பாட்டின் நோக்கம். உச்சபட்சச் சாதனையாளர்களில் தமிழ்நாடும் ஒன்றாக இடம்பிடித்திருப்பது பெருமைக்குரியது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளுக்கு ஏற்ற இடமாகத் தமிழ்நாட்டைத் தேர்வுசெய்ய இத்தகைய தரமதிப்பீடுகளும் வகைப்பாடுகளும் உதவியாக அமையும். நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கவனம்செலுத்தி வருகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளை வளர்த்தெடுப்பதிலும் அக்கறை காட்டப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை ஆகிய 5 இடங்களில், புதிய தொழிற்பேட்டைகளைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

இந்த 5 தொழிற்பேட்டைகள் 7,200 பேருக்கு நேரடியாகவும் 15,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (ஜூலை 4) கூடிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக ரூ.1,25,244 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. புதிதாக சுமார் 75,000 வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

திருவள்ளூர், தூத்துக்குடி, கங்கைகொண்டான், ஓசூர், தஞ்சாவூர் என்று தமிழ்நாடு முழுவதும் பரவலாகத் தொழிற்சாலைகள் தொடங்கப்படவுள்ளன என்பது இந்த முதலீட்டாளர் மாநாட்டின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

தொழில் வளர்ச்சி ஒரே இடத்தை மட்டும் மையமிட்டு இயங்காமல் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி ஏற்படுவதற்கான திட்டமிடல்கள் வரவேற்புக்குரியவை.

முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 14-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியிருப்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு முதல்வர். அந்தப் பெருமிதம் தொடர வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in