

நடைமுறையில் இருக்கும் 29 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக 4 சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் முயற்சி மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத் தொகுப்புகள், ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தள்ளிப்போனதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை. ஊதியங்கள் தொடர்பான சட்டத் தொகுப்பு 2019 ஆகஸ்ட்டிலும் சமூகப் பாதுகாப்பு; தொழிலக உறவுகள்; தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிநிலைகள் குறித்த சட்டத் தொகுப்புகள் 2020 செப்டம்பரிலும் நாடாளுமன்றத்தில் நிறைவேறின.
தொழிலாளர் நலன் என்பது அரசமைப்பின்படி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே, மத்திய அரசு இயற்றுகிற சட்டங்களுக்கு இசைந்தவாறு மாநிலங்கள் தமக்கான விதிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
விதிமுறைகளை உருவாக்குவதில் மாநிலங்களின் தாமதமே இந்தச் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்துவதிலும் தாமதம் ஏற்படக் காரணம் என்று கருதப்படுகிறது. இதனால், 4 சட்டத் தொகுப்புகளும் முழுமையாக நாடு முழுவதும் ஒரே நாளிலிருந்து நடைமுறைக்கு வருமா இல்லை ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனி சட்டத் தொகுப்புகளாக நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இச்சட்டத் தொகுப்புகளுக்கான மத்திய அரசின் விதிமுறைகள் ஏற்கெனவே இறுதிவடிவம் செய்யப்பட்டுவிட்டன. 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஊதியச் சட்டத் தொகுப்புக்கான விதிமுறைகளை இயற்றிவிட்ட நிலையில், தொழிலக உறவுகள் குறித்து 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களே விதிமுறைகளை இறுதிசெய்துள்ளன.
சமூகப் பாதுகாப்பு விதிமுறைகளை இயற்றிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 24 மட்டுமே. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்பதே புதிதாக இயற்றப்பட்டுள்ள தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளின் முதன்மையான நோக்கமாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அண்மையில் வெளிவந்துள்ள நிதி ஆயோக் ஆய்வறிக்கையானது, வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகிக்கும் சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் மருத்துவ விடுப்பு, மருத்துவக் காப்பீடு, தொழில்சார் உடல்நலக் கேடுகளுக்கான தீர்வுகள், விபத்து இழப்பீடுகள் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அடுத்துவரும் 8 ஆண்டுகளுக்குள் இத்தகைய சேவைகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.35 கோடியாக அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
தொழிலாளர்கள் நலம் சார்ந்து அரசுகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொழில் துறை வளர்ச்சிக்கேற்பத் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், 4 சட்டத் தொகுப்புகளும் இந்த எதிர்காலத் தேவைகளையும் உள்ளடக்குவதாக அமைய வேண்டும்.
அதே நேரத்தில், இந்தச் சட்டத் தொகுப்புகளைக் குறித்து அவற்றின் பயனாளிகள் போதுமான விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்பதும் முக்கியமானது.
தமிழ்நாட்டில் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான மாநில அரசின் விதிமுறைகள் அரசிதழில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகியிருக்கும் சூழலில், அவற்றைத் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கையும் விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும்.