

நாட்டின் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காமல் 33 கோடிக்கும் மேற்பட்ட மக்களும், தீவனமும் குடிநீரும் இல்லாமல் லட்சக்கணக்கான கால்நடைகளும் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், வெறும் நிதியை மட்டும் ஒதுக்கிவிட்டு மத்திய அரசு தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லொக்கூர், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு கண்டித்திருக்கிறது.
தங்களுடைய மாநிலத்தை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்காமல், குஜராத், பிஹார், ஹரியாணா மாநில அரசுகள் பாராமுகமாக இருக்கின்றன என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது. நாட்டின் கால்வாசிப் பகுதியையும் மக்களையும் பாதித்துள்ள வறட்சி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் நிவாரணப் பணிகள் குறிப்பிடும்படியாக இல்லை என்று ‘ஸ்வராஜ் அபியான்’ என்ற அமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அரசு அதிகாரிகள் வறட்சிப் பாதிப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. உண்ண உணவு, குடிநீர், வேலை, கால்நடைகளுக்குத் தீவனம், குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதற்குத்தான் கூட்டாட்சி முறை. ஆனால், நிதியை ஒதுக்கியதோடு மத்திய அரசின் கடமை முடிந்துவிட்டதா? வறட்சிப் பகுதிகள் பற்றிய அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் மாநில அரசுகளுடையது என்று கூறி, மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது. பிஹார், ஹரியாணா, குஜராத் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் வறட்சி நிலவுகிறது என்று அறிவிக்கக்கூட முன்வரவில்லை. அப்படி அறிவித்தால் அவமானம் என்று கருதுகின்றனவோ? மாநில அரசுகள் அப்படி அறிவிக்காததால் ‘கண்ணியமான வாழ்க்கை’ என்று அரசியல் சட்டம் உறுதியளிக்கும் உரிமையைப் பெற முடியாமல் ஏழை மக்கள் தவிக்கின்றனர்.
2005-ல் நிறைவேற்றப்பட்ட பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் 2 (டி) பிரிவின் படி, வறட்சியும் இயற்கைப் பேரழிவுதான். வறட்சியின்போது என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டி நூலும், தேசியப் பேரழிவு மேலாண்மை வழிகாட்டு நெறிகளும் காகிதங்களில்தான் உள்ளன.
வறட்சி நிவாரணப் பணியை மேற்கொள்ள பயிற்சி பெற்ற தொண்டர்களைக் கொண்ட ‘தேசியப் பேரிடர் நிவாரணப் படை’யை ஆறு மாதங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘வறட்சி நிவாரணப் பணி வழிகாட்டு நெறி’களை இப்போதைய காலத்துக்கேற்ப நவீனப்படுத்த வேண்டும். பேரழிவை மதிப்பிடுவது, நெருக்கடியைச் சமாளிப்பது தொடர்பாக தேசிய அளவிலான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. வறட்சி காரணமாக மக்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்வது, தற்கொலை செய்துகொள்வது, கால்நடைகளை மிகக் குறைந்த விலைக்கு விற்க நேர்வது, அதிக வட்டிக்குக் கடன்படுவது, பெண்கள் வீடு வாசல்களைவிட்டு கூலி வேலைக்காகப் புதிய இடங்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் செல்ல நேர்வது, படிப்பு - பாதுகாப்பான சூழல் போன்றவற்றை விட்டுவிட்டு ஆபத்தான சூழல்களில் குழந்தைகள் சிக்குவது போன்றவற்றை அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்குப் பிறகாவது மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்படுமா?