

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மாநிலம் தழுவிய அளவில் போதைப் பொருட்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பது குறித்து, அண்மையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் காவல் துறை அதிகாரிகளுடனான காணொளிக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த ஓராண்டில் காவல் துறையின் பாராட்டுதலுக்குரிய நடவடிக்கைகளில் முதன்மையானதாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளைச் சொல்லலாம். கடந்த ஓராண்டு காலமாக போதைப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டுவருபவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகிறார்கள்.
2021 டிசம்பரில் தொடங்கி மேலும் சில மாதங்களுக்குத் தொடர்ந்த காவல் துறையின் கஞ்சா வேட்டையில், வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களிலிருந்து கஞ்சா கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டன. தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு அளித்துவரும் சிறப்புக் கவனத்தின் காரணமாக மண்டல, மாவட்ட அளவில் அனைத்துக் காவல் துறை அதிகாரிகளும் போதைப் பொருட்கள் வேட்டையில் தீவிரக் கவனம் செலுத்தி சமூக விரோதிகளைச் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கிவருகிறார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்படும் கள ஆய்வுகள், அவர்களில் மிகச் சிலருக்குப் போதையளிக்கும் பொருட்களுடன் அறிமுகம் இருப்பதைத் தொடர்ந்து கவனப்படுத்திவருகின்றன. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கும் போதைப் பொருட்களை விநியோகிப்போருக்கும் இடையிலான தொடர்புச் சங்கிலிகள் இயல்பாகவே துண்டிக்கப்பட்டிருந்தன.
மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில், சமூக விரோதிகள் மாணவர்களுடனான தொடர்பைப் புதுப்பித்துக்கொள்ள அனுமதிக்காமல், காவல் துறை துரிதமாகச் செயல்பட்டு இளைஞர்களைப் பாதுகாத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தத் தொடர் நடவடிக்கை ஓர் இயக்கமாக இந்த ஆண்டும் தொடர உள்ளது.
போதைப் பொருட்கள் விநியோகம் சட்டவிரோதம் என்ற நோக்கில், காவல் துறை தக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறது என்றபோதும் போதைப் பொருட்களின் பயன்பாடுகளிலிருந்து இளைஞர்களை முற்றிலுமாகப் பாதுகாப்பது என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனச் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு.
சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரும் போதைப் பொருட்கள் விநியோகம் தொடர்பில் தாம் அறிய நேர்கிற எந்தவொரு தகவலையும் காவல் துறையோடு பகிர்ந்துகொள்வதற்கு, அது குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உருவாக வேண்டும். சமூகத்துடன் கூட்டாக இணைந்து போதைப் பொருட்களுக்கு எதிராக இயக்கத்தை முன்னெடுக்கும்போதுதான் அதன் இலக்கை எட்டுவது எளிதாகும்.
போதைப் பொருட்கள் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் எத்தகைய கேடுகளை விளைவிக்கும் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குப் போதிய கால இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான திட்டங்களும் தேவை. போதைப் பழக்கத்திலிருந்து விடுபட ஆலோசனை வழங்கும் மையங்கள் இளைஞர்கள் தயக்கமின்றி எளிதில் அணுகக்கூடியதாகவும் அமைய வேண்டும்.