

இந்தியாவில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் சம பங்கினராக இருக்கின்றனர். இத்தகையோர் மிகக் குறைந்த ஊதியம் கிடைக்கும் விவசாய வேலையிலிருந்து நகர்ப்புற வேலைகளுக்கு மாற விரும்புகின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு கோடிப் பேர் வேலைவாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். உற்பத்தித் துறையில் உள்ள தொழில்களைவிட சேவைத் துறையில் உள்ள நிறுவனங்களில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று இந்த ஆண்டு தனியார் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனாலும், சேவைத் துறை மட்டுமே அனைவருக்கும் தேவையான வேலைவாய்ப்புகளை வழங்கிவிடாது.
தொழில் துறையின் உச்சகட்டமான வளர்ச்சிக் காலமாக 2004 முதல் 2010 வரையிலான காலகட்டத்தை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில்தான் நிரந்தர வேலைவாய்ப்புகளும் சுய வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன எனும் விவரங்கள் வெளியாகியுள்ளன. உண்மையில், வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சியாகவே இந்த காலகட்டம் இருந்துள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சி மக்களுக்கு எப்படிப் பயன்படும்?
மத்திய அரசு 2008 முதல் ஒவ்வொரு காலாண்டிலும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை வெளியிட்டுவருகிறது. அதன்படி 2015-ல் 1.35 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளிலேயே மிக மிகக் குறைவான அளவு இதுதான். 2014-ல் 4.9 லட்சம் பேரும் 2009-ல் 12.5 லட்சம் பேரும் வேலை பெற்றுள்ளனர் என்பதிலிருந்தே இது புரியும். இன்னும் சொல்லப்போனால், 2015-ன் கடைசிக் காலாண்டில் வேலையிழப்புகள்தான் அதிகம்!
ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 10% ஆக இருந்தால் 2032-க்குள் 17.5 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாம் என்கிறது மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்ட தொலைநோக்குத் திட்ட அறிக்கை. இப்போதுள்ள 7%-ன்படி என்றால் 11.5 கோடிப் பேருக்குத்தான் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கலாம் என்கிறது அந்த அறிக்கை.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதத்தில் ஒவ்வொரு சதவீதத்துக்கும் எத்தனை கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்று இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி எனும் மக்களுக்குப் பயன்படாத வளர்ச்சிப்போக்கைக் கட்டுப்படுத்த முடியும்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்குத்தான் வரிச் சலுகைகளை அளிக்க வேண்டும். ஜவுளித் துறை ஏற்றுமதி பெருக ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் தொழில் உறவுகளை நாம் பலப்படுத்த வேண்டும். சுற்றுலாத் துறையை வளர்க்க உள்நாட்டு விமான நிலையங்களை அரசு மேம்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களின் நலன் காக்கப்பட, வேலைவாய்ப்பு பெருக, சீர்திருத்த நடவடிக்கைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுப்பதால் எந்தப் பலனும் இல்லை. தொழிலாளர் நலனுக்காக என்று கூறிக்கொண்டு ஆலை நிர்வாகங்களுக்குச் சாதகமாக விதிகளையும் சட்டங்களையும் திருத்துவதால் தொழில்துறை வளர்ச்சியோ, வேலைவாய்ப்புப் பெருக்கமோ ஏற்பட்டுவிடாது.
மாணவர், இளைஞர் சமூகத்தினர் படைப்பாக்கத்திறன் வாய்ந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கி, தொழில்துறைக்குப் புது ரத்தம் பாய்ச்சும்வகையில் அரசு புதிய உற்சாகமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்குத் தொழில் திறனை அளிக்க வேண்டும். ஏற்கெனவே திறன் பெற்றவர்களுக்கு அதை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.
சமூக, பொருளாதார வளர்ச்சிக் கொள்கையின் மையப்புள்ளியாக இருப்பது வேலைவாய்ப்புதான் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். இளைஞர்களின் கையில் எதிர்காலம் என்பன போன்ற வெற்றுப் பேச்சுக்களைத் தாண்டி ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டியது அரசின் கடமை!