கொலம்பியாவில் இடதுசாரிகளின் வெற்றி!

கொலம்பியாவில் இடதுசாரிகளின் வெற்றி!
Updated on
1 min read

கொலம்பியாவின் முதலாவது இடதுசாரி அதிபராக குஸ்தவா பெட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது லத்தீன் அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகம் முழுவதுமே இடதுசாரிகளுக்குப் புதிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பெட்ரோ, 80-களில் ஆயுதம் தாங்கிய அரசியல் குழுவில் அங்கம் வகித்தவர். இதற்கு முன்பு 2010-லும் 2018-லும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய பெட்ரோ, தற்போது போட்டியிட்ட மூன்றாவது அதிபர் தேர்தலில் வெற்றிவேட்பாளர் ஆகியிருக்கிறார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருக்கும் ரொடால்ஃபோ ஹெர்னாண்டஸ் சௌரஸ், அந்நாட்டில் மிகவும் பிரபலமான கட்டுமானத் துறைத் தொழிலதிபர். மையவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வலதுசாரித் தொழிலதிபர் ஒருவருக்கு எதிரான முன்னாள் யுத்தக் குழு உறுப்பினரின் வெற்றியானது கொண்டாடப்படுவதில் ஆச்சரியமில்லை.

துணை அதிபராகப் பதவியேற்றிருக்கும் பிரான்ஸியா மார்க்வேஸ், முன்பொரு காலத்தில் வீடுகளில் பணிப்பெண்ணாக வேலைசெய்தவர். மனித உரிமை மற்றும் சூழலியல் ஆர்வலர் என்பதோடு அந்நாட்டில் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கறுப்பினத்தைச் சேர்ந்த முதலாவது பெண். எனவே, பெருஞ்செல்வந்தர்களுக்கு எதிரான சாமானியர்களின் வெற்றி என்ற வகையில், கொலம்பிய அதிபர் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

1948-ல் கொலம்பிய அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரித் தலைவர் ஜார்ஜ் கைதான் படுகொலைக்குப் பிறகு, இடதுசாரிகளின் செல்வாக்கு மங்கத் தொடங்கியது. மரபுவாதிகளுக்கும் தாராளவாதிகளுக்கும் இடையே ஏறக்குறைய 60 ஆண்டு காலம் நீடித்துவந்த யுத்தத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

இன்னும் அந்தத் துயர நினைவுகள் முழுமையாக நீங்காத நிலையில், அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் பெற்றிருக்கும் வெற்றி கொலம்பிய அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில், இடதுசாரி அரசுக்கு முன்னுள்ள சவால்களும் அவ்வளவு எளிதானவை அல்ல. போதைப் பொருட்களின் வணிகத்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். தொழில் துறைக்கும் விவசாயத்துக்கும் புத்துயிர் அளிக்க வேண்டும். கொலம்பிய நாடாளுமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகித்துவரும் நிலையில், போதிய பெரும்பான்மை இல்லாத இடதுசாரிகள், தங்களது தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியாக வேண்டும்.

அனைவருக்கும் இலவச உயர் கல்வி, ஓய்வூதியச் சீர்திருத்தங்கள், விவசாயம் மேற்கொள்ளப்படாத நிலங்களின் மீது அதிக வரி என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இடதுசாரிகளின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தன. அனைத்தையும் தாண்டி, கொலம்பியாவில் நிலவும் கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சகித்துக்கொள்ள முடியாததாலேயே அந்நாட்டு மக்கள் இடதுசாரிகளை ஆதரித்துள்ளனர்.

கலப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை அதிபராகவும் கறுப்பினத்தைச் சேர்ந்த மற்றொருவரைத் துணை அதிபராகவும் தேர்ந்தெடுத்திருப்பதன் வாயிலாக அந்நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் முடிவுக்கு வரும் என்பது கொலம்பிய மக்களின் நம்பிக்கை. ஊழலையும் வறுமையையும் ஒழித்து, நாட்டில் அமைதி நிலவ இடதுசாரி அரசு முயற்சியெடுக்கும் என்கிற அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in