

புதுவையில் இயங்கிவரும் ஜவாஹர்லால் நேரு முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) அண்மையில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவறாது இடம்பெறச் செய்ததன் வாயிலாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது.
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்றாலும், மத்திய அரசு நிறுவனங்களில் நடத்தப்படும் ஒருசில விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடரவே செய்கிறது.
இந்நிலையில், மத்திய அரசு நடத்தும் நிறுவனங்களின் விழாக்களில் கலந்துகொள்ளும் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் விழாக் குழுவினருக்கு உரிய முறையில் நினைவூட்டி, இக்குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியும் என்பதற்கு உதாரணமாக புதுவை ஜிப்மர் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
‘அரசு விழாக்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற வேண்டும்’ என்று தனது விழா உரையிலும் குறிப்பிட்டுப் பேசியுள்ள புதுவை ஆளுநர், தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதுபோலவே, தமிழுக்கும் சேவை செய்ய வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில், 1970 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகளை வழங்கும் விழாவில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி, ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ பாடலை அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடுவதற்குத் தேர்வுசெய்துள்ளதாக அறிவித்தார்.
அதற்கான அரசாணை நவம்பர் 23, 1970 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் பதிவுசெய்யப்பட்டு இசைப்பதற்குப் பதிலாகப் பாடப்பட வேண்டும் என்று 2021, ஆகஸ்ட் மாதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து என்று தனித்தனியாக ஒரு பாடலைப் பின்பற்றிவருகின்றனர் என்பதும் கவனத்துக்குரியது.
புதுச்சேரியில் ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற பாரதிதாசனின் பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டுவருகிறது. மலேசிய எழுத்தாளர் சங்கம், சீனி நைனா முகம்மது எழுதிய ‘காப்பியனை ஈன்றவளே’ என்ற பாடலை, உலகத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலமும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் தமிழ்த்தாய் வாழ்த்தாக எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. அதுபோலவே உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் தங்களுக்குப் பிடித்த பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடிவருகின்றனர்.
இதனிடையே, உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒரே பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகின்றன. உலகத் தமிழாராய்ச்சி மாநாடு போன்ற சர்வதேசக் கூடுகைகளில் இது குறித்து ஒரு பொதுமுடிவை எட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.