

தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியுள்ள நிலையில், இப்படியொரு தற்காப்பு நடவடிக்கை தவிர்க்கவியலாதது.
சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்கள் மாநகரப் பகுதிகளை உள்ளடக்கியிருப்பதோடு தொழிற்சாலைகள் மிகுந்துள்ள பகுதிகள் என்பதால் தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு அதிகம்.
எனவே, தொற்றுப் பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களின் நிர்வாகங்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவ்வகையில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் முகக்கவசத்தைக் கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே கோவை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாகப் பொது இடங்களில் முகக்கவசத்தைக் கட்டாயமாக்கியது பாராட்டுக்குரியது.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பயணிகளில் ஒரு சிலருக்குத் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோரும் தினசரி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரும் தொற்றுப் பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவது அவசியம். வணிக மையங்களிலும், விழாக்களிலும் கூட்ட நெரிசலை இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு தவிர்ப்பதே நல்லது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்போடு தவறாமல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக, தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் ஏற்கெனவே போட்டுக்கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையாக மூன்றாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதையொட்டி, பிரதமரும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 23% மட்டுமே மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மூன்றாவது தவணை போட்டுக்கொண்ட சுமார் 4.40 கோடி பேரில் 2.35 கோடி பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். மூத்தக் குடிமக்களைத் தவிர்த்துவிட்டு கணக்கில் கொண்டால், 18-59 வயதினரில் சுமார் 2.05 கோடி பேர் மட்டுமே மூன்றாவது தவணை போட்டுக்கொண்டுள்ளனர்.
மருத்துவத் துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் ஜனவரி 10, 2022-லிருந்து மூன்றாவது தவணை விலையின்றி அளிக்கப்பட்டுவருகிறது. ஆனால், மூன்றாவது தவணையை அரசு அல்லது தனியார் மருத்துவ மையங்களில் விலை கொடுத்து போட்டுக்கொள்வதில் கடுமையான தயக்கம் நிலவிவருகிறது.
இதற்கு, தொற்றுப் பரவல் குறித்த விழிப்புணர்வு போதாமை என்பதைக் காட்டிலும் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்திருப்பதும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்த வருமானப் பிரிவினருக்கு மூன்றாவது தவணை தடுப்பூசியையும் விலையின்றி கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.