

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உடனடி வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில், தொழில்திறன்களை வளர்த்தெடுக்க மத்திய - மாநில அரசுகள் முன்னெடுத்துவரும் புதிய திட்டங்கள் வரவேற்புக்குரியவை. அவை மென்மேலும் பரவலாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். உலக வங்கி நிதியுதவியின் கீழ், நாடு முழுவதும் 440 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களை(ஐடிஐ) மத்திய அரசு மேம்படுத்திவருகிறது.
அரசு - தனியார் கூட்டு முயற்சியின் கீழ் 1,127 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுவருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் இது தொடர்பாகத் தீவிரக் கவனம்செலுத்தி வருவது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக அரசின் பல்வேறு துறைகளால் நடத்தப்பட்டுவரும் திறன் பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டுடனான கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைக் கருத்தில்கொண்டு, ஏற்கெனவே 12 துறைகளில் திறன் குழுமங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
‘நான் முதல்வன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்த இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அந்த வேலைகளுக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது ஆகிய இரண்டையும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாகத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திறன் மேம்பாட்டை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்றாக, சமீபத்தில் ‘டாடா டெக்னாலஜிஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, 71 தொழிற்பயிற்சி நிலையங்களைத் தரமுயர்த்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகளாவிய 20 தொழில் துறை நிறுவனங்களுடன் இணைந்து ‘டாடா டெக்னாலஜிஸ்’, மாறிவரும் தொழிற்சாலைத் தேவைகளுக்கு ஏற்றவாறு பாடத்திட்டம், பயிற்சித்திட்டங்கள், உபகரணங்கள், மென்பொருள் உதவிகளை அளிக்கவுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களை நவீனப்படுத்துவதோடு, தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மையங்களாக அவற்றை வளர்த்தெடுக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடர்பில், தமிழ்நாட்டின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சிறப்புக் கவனம் எடுத்துவருகிறது. தொழிலாளர் நலத் துறை அமைச்சரின் சுற்றுப்பயணங்களின்போது அங்குள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ஆய்வுசெய்வதும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
‘ஐடிஐ மாணவர் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும், புதிதாக 11 ஐடிஐ உருவாக்கப்படும்’ ஆகிய அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக, பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் ஈர்ப்பு நிலவுகிறது என்றாலும் பொறியியல் பட்டதாரிகளுக்குப் போதுமான வேலைவாய்ப்பு இன்னும் உருவாகவில்லை.
அதே நேரத்தில், உடனடி வேலைவாய்ப்புக்குச் சாத்தியமான தொழில்திறன் பயிற்சிகள் கண்டுகொள்ளப்படாத நிலையும் ஏற்பட்டது. பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டியிருக்கும் நிலையில், தொழில் பயிற்சி நிறுவனங்களைப் புத்துயிரூட்டிவரும் தமிழ்நாடு அரசின் முயற்சிகள் தொடர வேண்டும்.