

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதம் தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அளவிலும் முக்கியமான தொரு விவாதமாக மாறியிருக்கிறது.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் நலன்களைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு சட்ட முன்வரைவும் இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் வேண்டுகோள், மாநில உரிமைகள் தொடர்பில் தமிழ்நாட்டின் நீண்ட கால குரலைப் பிரதிபலித்துள்ளது.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதோடு, மாநிலங்களுக்கு இடையிலான உறவையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த கவுன்சில் 1990-ல் தோற்றுவிக்கப்பட்டது. 1988-ல் மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த கவுன்சில் நிறுவப்பட்டது.
இப்படியொரு கவுன்சிலுக்கான தேவையிருக்கிறது என குடியரசுத் தலைவர் கருதினால், அதை அவர் ஏற்படுத்தலாம் என்று இந்திய அரசமைப்பின் கூறு 263 தெரிவிக்கிறது. அந்தக் கூறின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு திறம்படச் செயலாற்றவில்லை என்பது அரசமைப்பு வல்லுநர்களாலும் மாநில உரிமைகளின் ஆதரவாளர்களாலும் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டுவந்தது.
இந்நிலையில், கடந்த மே 22 அன்று மத்திய அரசு இந்த கவுன்சிலை மறுவுருவாக்கம் செய்ததையொட்டியே தற்போதைய விவாதம் எழுந்துள்ளது.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயும் மாநிலங்களுக்கு இடையேயும் விவாதங்களை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த கவுன்சில் கருதப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான முக்கியப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளவும் அது குறித்து விசாரித்துப் பரிந்துரைகளை அளிக்கவும் இவ்வமைப்பு இடமளிக்கிறது.
மத்திய-மாநில உறவுகளில் ஏற்படும் விவாதங்களைப் போலவே, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்படுவதற்கான அரசமைப்புரீதியான ஒரு வாய்ப்பு இது. ஆனால், 1990-ல் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து 11 முறை மட்டுமே கூடியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்த கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றிருப்பதாக திமுக சுட்டிக்காட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் கவுன்சில் தொடர்ந்து கூட்டப்படவில்லை என்ற கருத்தைத் தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், பாஜக என்று இரண்டு தேசியக் கட்சிகளுமே கவுன்சில் கூட்டங்களை நடத்துவதில் இதுவரை போதுமான அக்கறையைக் காட்டவில்லை என்பதே உண்மை. இனிமேலாவது, அதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது. கூட்டுறவு கூட்டாட்சி என்ற முழக்கத்தை முன்வைக்கும் பாஜக, அதை மெய்ப்பிக்கும் விதமாக மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளது.
ஆனால், அது முறையாக ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்பட்டால் மட்டுமே அதன் நோக்கம் நிறைவேறும். அதே நேரத்தில், மத்திய அரசு கூட்டுகின்ற மாநிலங்களுக்கு இடையிலான கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்ப்பதை திமுக ஓர் அரசியல் உத்தியாகக் கையாள்கிறது என்ற தமிழ்நாடு பாஜக தலைவரின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.