

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவிவருவதை அடுத்து, சில்லறை விநியோக மையங்களுக்குக் கையிருப்பு மற்றும் விற்பனைக்கான அளவுகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது விற்பனையாளர்களிடம் மட்டுமின்றி, நுகர்வோரிடமும் அதிருப்தி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
முதற்கட்டமாக, வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டிலும் இது அறிவிக்கப்படாமலேயே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களிலும்கூட பொதுத் துறையின் கீழ் இயங்கிவரும் சில்லறை விற்பனை மையங்களில் பெட்ரோல், டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இந்நிலை தொடரும்பட்சத்தில், அன்றாடப் பணிகளும் தொழில் துறை நடவடிக்கைகளும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் மக்களிடையேயும் தொழில் துறையினரிடையேயும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு, விற்பனையாளர்கள் தங்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசலைக் கடனாகப் பெற்று, அக்கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்தத் தவணைக் கடன் வசதி நிறுத்தப்பட்டுள்ளதும் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாகியுள்ளது.
இதனால், கிராமப்புறப் பகுதிகளில் இயங்கிவந்த விற்பனை மையங்கள் தங்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசலை இருப்புவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை மையங்களில் ஏறக்குறைய 80% சிறு வணிகர்களாலேயே நடத்தப்பட்டுவருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் கடன் சுமையை எதிர்கொண்டுள்ள பெட்ரோலிய நிறுவனங்கள், தாங்கள் சிறுவணிகர்களுக்கு அளித்துவரும் தவணைக்கடன் வசதியைத் தற்போது நிறுத்திக்கொண்டுவிட்டன.
அதன் தொடர்விளைவாக விற்பனை மையங்களில் பெட்ரோல், டீசலைக் கடனாகப் பெற்றுவந்த பேருந்து, லாரி உரிமையாளர்களும் அவ்வாய்ப்புகளை இழந்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்களில் போதுமான கையிருப்பு உள்ளபோதிலும் கடன் வசதியை நிறுத்திக்கொண்டதே தமிழ்நாட்டில் தற்போது வாகன எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கியிருக்கிறது.
‘தட்டுப்பாடு இல்லை, மக்கள் அச்சமடைய வேண்டாம், போதுமான கையிருப்பு இருக்கிறது’ என்று பெட்ரோலிய நிறுவனங்கள் விளக்கம் அளிக்கின்றன. சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையால் உருவாகியிருக்கும் இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கவில்லை. இதனால் டீசல் லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், பெட்ரோலுக்கு ரூ.14 முதல் ரூ.18 வரையிலும் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
விலை உயர்வுக்கு அனுமதிக்காத நிலையில், விநியோகத்தைக் குறைத்தால் இழப்பைக் குறைக்கலாம் என்ற அணுகுமுறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. மக்களின் அத்தியாவசியத் தேவையாக இருந்துவரும் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் நடந்துவரும் இதுபோன்ற சிக்கல்கள் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து தடையற்ற விநியோகம் இருப்பதை உறுதிசெய்வது மத்திய அரசின் கடமை.